நீண்ட காலமாக பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்த 13 அடி நீளமான மலைப்பாம்பு மீட்கப்பட்டு பாதுகாப்பு வனத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது.
பலாங்கொடை பின்னவல பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இப்பிரதேசத்தில் அடிக்கடி பல இடங்களில் தென்பட்ட இந்த மலைப்பாம்பால் இப்பிரதேசத்தில் மக்கள் வீடுகளில் அச்சத்துடனே இருந்தனர். குழந்தைகள் மற்றும் பூனை, நாய், ஆடுகள் போன்ற பிராணிகளுக்கு ஆபத்து ஏற்படலாமென அஞ்சினர்.எனினும் இந்த மலைப்பாம்பு இடையிடையே தலைமறைவாகியதால் பிரதேச மக்களின் அச்சம் பல மடங்கு அதிகரித்தது.
இதனால் இதனைத் தேடி கண்டுபிடித்து பிரதேச மக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தை நீக்குவற்கு பிரதேச இளைஞர்கள் எச்சரிக்கையாக இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த மலைப்பாம்பை கண்ட முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் இவ்விடயத்தை ஊர் மக்களுக்கு அறிவூட்டியதையடுத்து அதனைப் பிடிக்க முழு முயற்சி மேற்கொண்ட போதிலும் மலைப்பாம்பு புதர்களுக்குள் மறைந்து குழி ஒன்றினுள் புகுந்துள்ளது.
இதனைப் பிரதேச மக்களால் மீட்க முடியாத நிலையில் பெலிஹுல்ஓ ய வனப்பாதுகாப்பு காரியாலயத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவ்வதிகாரிகள் குழியொன்றினுள் மறைந்திருந்த மலைப்பாம்பினை மீட்டுச் சென்றதுடன் அதனை பெலிஹுல்ஓய வனாந்தரத்தில் விடுவிப்பதாகவும் நேற்று தெரிவித்தனர்.










