பலாங்கொடை – விகிலிய – அல்தொரவத்த பகுதியில் வாழும் மக்கள் எதிர்நோக்கியுள்ள குடிநீர் பிரச்சினை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், மாவட்ட வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் கள விஜயமொன்றில் ஈடுபட்டு விடயங்களை ஆராய்ந்துள்ளார்.
குறித்த பகுதியிலுள்ள சுமார் 300ற்கும் அதிகமான குடும்பங்கள் இந்த குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாக ஊடகங்களில் இன்று செய்தி வெளியாகிய நிலையிலேயே அவர் இந்த கள விஜயத்தில் ஈடுபட்டார்.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்த கிணறு தற்போது முழுமையாக செயலிழந்துள்ளதாக அறிய கிடைத்தது.
கடந்த ஆட்சியாளர்கள் குறித்த கிணறை செய்து கையளித்துள்ள போதிலும், பிரதேச மக்களிடமிருந்து மாதாந்தம் 2000 ரூபாவை அறவிட்டுள்ளதாக பிரதேச மக்கள் ஆனந்தகுமாரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இவ்வாறான நிலையில், குறித்த கிணற்றிற்கு பொருத்தப்பட்ட நீரை பெற்றுகொள்வதற்கான இயந்திரம் இரண்டு மாதங்களிலேயே செயலிழந்து விட்டதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
தமது அன்றாட நடவடிக்கைகளுக்கு தேவையான குடிநீரை பெற்றுகொள்வதற்கு சுமார் 3 கிலோமீற்றர் தூரம் வரை சென்று நீரை பெற வேண்டிய நிலைமை உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
தமது பிரச்சினைகளை கடந்த ஆட்சியாளர்கள் எவரும் கண்டுகொள்ளவில்லை என ஆதங்கம் வெளியிட்ட அந்த பிரதேச மக்கள், தாம் ஆனந்தகுமாரை தற்போது நம்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.