யாழ். பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு 35 வருடங்களின் பின்னர், கட்டுப்பாடுகள் இன்றி வழிபட நேற்று வெள்ளிக்கிழமை இராணுவத்தினர் அனுமதித்திருந்த நிலையில் இன்று சனிக்கிழமை மீள ஆலயத்துக்குச் செல்ல அனுமதி மறுத்துள்ளனர்.
உள்நாட்டுப் போர் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர். அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாகக் காணப்பட்டது.
கடந்த 35 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள ஆலயத்துக்குக் கடந்த 6 மாத காலத்துக்கு முதலே சுதந்திரமாகச் சென்று வழிபட அனுமதி வழங்கப்படும் என இராணுவத்தினர் அறிவித்து இருந்த போதிலும் , இதுவரை காலமும் கடுமையான கட்டுப்பாடுகளுடன், விசேட தினங்களில் மாத்திரம் ஆலயத்துக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆலயத்துக்கு மாத்திரம் செல்வதற்கு என உயர் பாதுகாப்பு வலயத்தினுள் பிரத்தியேக பாதை அமைக்கப்பட்டு, குறித்த பாதை ஊடாக நேற்று வெள்ளிக்கிழமை முதல் மக்கள் ஆலயத்துக்கு மாத்திரம் சென்று வழிபட்டுத் திரும்ப இராணுவத்தினர் அனுமதி வழங்கி இருந்தனர்.
ஆனால், இன்று சனிக்கிழமை ஆலயத்துக்குச் செல்லும் பிரத்தியேக பாதையை இராணுவத்தினர் மூடி முட்கம்பி வேலி அமைத்திருந்ததுடன், இரண்டு இராணுவத்தினர் கடமையிலும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
ஆலயத்துக்கு இன்று வழிபடச் சென்ற மக்கள், இராணுவத்தினர் ஆலயத்துக்குச் செல்ல அனுமதிக்காததால் முட்கம்பி முன்பாக தேங்காய் உடைத்து கற்பூரம் கொளுத்திப் பூப்போட்டு வழிபட்டனர்.