பழமையான புத்தர் சிலையை விற்க முயன்ற மூவர் கைது! மாறு வேடத்தில் சென்று பொலிஸார் அதிரடி பாய்ச்சல்!

பதுளை, கந்தகெடிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தகெடிய பகுதியில் பழைமையான புத்தர் சிலையொன்றை விற்பனைக்காக வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கந்தகெடிய பொலிஸின் குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இக்கைது இடம்பெற்றுள்ளது.

கந்தகெடிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் தசநாயகவின் ஆலோசனைக்கு அமைய கந்தகெடிய பொலிஸ் நிலையத்தில் இரண்டு அதிகாரிகள் சிலையை கொள்வனவு செய்யும் நபர்கள் போல் மாற்று வேடத்தில் குறித்த வீட்டுக்கு சென்று சிலையை பரிசோதிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்களினால் சிலை மாறுவேடம் பூண்ட பொலிஸாரிடம் கொடுக்கப்பட்டது.

இதன்போது மேலும் சில பொலிஸ் குழுவினர்கள் குறித்த வீட்டினை சுற்றி வளைத்து சிலையை கைப்பற்றியதோடு 46,41,26 வயதுகளையுடைய மூவரை கைது செய்துள்ளனர்.

குறித்த சிலை மிகவும் பழைமை வாய்ந்தது எனவும் 80 லட்சம் ரூபாவுக்கு குறித்த சிலையை விற்பனை செய்வதற்காக பேரம் பேசியதாகவும் கந்தகெடிய பொலிஸ் நிலைய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் இன்று பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கந்தகெடிய பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை கந்தகெடிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles