ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவை அமெரிக்க சுற்றுலா பயணி என வர்ணித்துள்ளார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.
அமெரிக்க சுற்றுலாப் பயணி அங்கு உழைத்துவிட்டு வந்து இங்கு பணம் செலவளித்தால் மகிழ்ச்சி, ஆனால் இந்த சுற்றுலாப் பயணி இங்கு உழைத்துவிட்டு அங்கு சென்று செலவளிக்கின்றார் எனவும் அவர் கூறினார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது பஸில் ராஜபக்சவின் இலங்கை பயணம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கம்மன்பில ,
“ இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் அமெரிக்க பிரஜையான அவரை (பஸில்) யாராவது அழைத்திருக்கலாம். சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவது மகிழ்ச்சி. ஆனால் இந்த பயணி இங்கு உழைத்துவிட்டு அதை அமெரிக்காவுக்கு கொண்டுசென்று செலவளிக்கின்றார். அதனால் அவரது வருகையை விரும்பவில்லை.” – என்று குறிப்பிட்டார்.
