மறைந்த பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்துக்கு ஹைதராபாத்தில் நேற்று 7.2 அடி உயர வெண்கல முழு உருவச்சிலை திறக்கப்பட்டது.
பிரபல பின்னணிப் பாடகர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண்டவர் எஸ்பி பாலசுப்ரமணியம். இவர் கடந்த 2020-ம் ஆண்டு உயிரிழந்தார்.
இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள ரவீந்திரபாரதி வளாகத்தில் எஸ்பிபி-யின் சிலையை முன்னாள் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு , ஹரியானா முன்னாள் ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் திறந்து வைத்தனர்.
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் எஸ்பிபியின் 7.2 அடி உயர வெண்கல சிலை உருவாக்கப்பட்டது. நின்ற நிலையில் உள்ள எஸ்பிபியின் சிலைக்கு தங்க வர்ணம் பூசப்பட்டிருந்தது.
இவ்விழாவில் அமைச்சர் ஸ்ரீதர் பாபு, தெலங்கானா பாஜக தலைவர் ராமசந்தர் ராவ், எஸ்பிபியின் மனைவி, பாடகரும் அவரது மகனுமான எஸ்பிபி சரண், தங்கை எஸ்பி சைலஜா, அவரது குடும்பத்தார்பங்கேற்றனர்.
