சீரற்ற காலநிலை காரணமாக முழுமையாகவும் பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளை உரிய முறைமையின்படி அடையாளம் காணுமாறும், இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான துல்லியமான தரவுகளை திறம்படப் பெறுவதற்கான விசேட பொறிமுறையை உருவாக்கவும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை விடுத்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கும், நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றபோதே, ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
டித்வா சூறாவளியினால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறையை ஆராயும் நோக்கத்துடன் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வாழும் மக்கள் மீண்டும் இதுபோன்ற அனர்த்தத்தினால் பாதிக்கப்படாமல் இருக்க நீண்டகால தீர்வை வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அதற்கான துல்லியமான தரவுகளை அடையாளம் காணுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதுவரை நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளின் படி மண்சரிவுகளினால் 1289 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாகவும், 44,574 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜூட் நிலுக்ஷான், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் அரவிந்த சிறிநாத ஆகியோர் உட்பட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.










