” ஜனாதிபதியை நெருக்கடிக்கு உள்ளாக்கி ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டம் தமது கட்சிக்கு கிடையாது. ” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன அரசுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் எஸ்.எம். சந்திரசேன மேலும் கூறியவை வருமாறு,
” ரோஹித அபேகுணவர்தன, நான் உட்பட மொட்டு கட்சியின் மாவட்ட தலைவர்களே இந்த அரசை உருவாக்க பெரும் பாடுபட்டனர். எனவே, அந்த அரசில் தமக்கான உரிய இடம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் உள்ளது. ஆகவே, இது தொடர்பிலும் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்.
ஜனநாயகத்தை பாதுகாக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவுமே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நாட்டைக் கையளித்தோம். கடும் சவால்களுக்கு மத்தியிலும் அவர் அப்பணியை முன்னெடுக்கின்றார். அதற்கு நன்றிகள், தமக்கு அரசியல் ரீதியில் உதவும் நபர்கள் குறித்தும் அவர் கவனம் செலுத்தினால் இப்படியான அறிவிப்புகள் வெளிவராது.
நெருக்கடியான சூழ்நிலையில் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆனது முதல் இன்றுவரை அவருக்கு ஒத்துழைப்பை வழங்கிவருகின்றோம். ஜனாதிபதியை நெருக்கடிக்குள் தள்ளவும், ஆட்சியை கவிழ்க்கவும் நாம் திட்டமிடவில்லை. மனக்கவலையையே ரோஹித வெளியிட்டுள்ளார்.” – என்றார்.
