‘பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கீடு’ – எதிர்ப்பு தெரிவித்து தமிழ்க்கட்சிகள் வெளிநடப்பு

பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. பிரதான சபை நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் ஆரம்பமானது.

விவாதத்தின் நிறைவில் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டை அங்கீகரிப்பது தொடர்பில் வாக்கெடுப்பை நடத்துமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கான அனுமதியை சபாநாயகர் வழங்கவில்லை. கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவ்வாறான தீர்மானம் எடுக்கப்படாமையினால் அதற்கு சந்தர்ப்பம் இல்லையென சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

எனினும், அவர்களின் அந்த ஆட்சேபனை பதிவு செய்யப்படும் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.

இதனை இவ்விரு கட்சிகளின் எம்.பிக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வாக்கெடுப்புக்கு அனுமதி வழங்கப்படாததால் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Related Articles

Latest Articles