‘இலங்கைக்கான பயண தடையை அமெரிக்கா விதிக்கவில்லை. பயண எச்சரிக்கை அறிவுறுத்தலே விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவுறுத்தலை அந்நாடுகள் விரைவில் நீக்கிக்கொள்ளும்.” – என்று அமைச்சர் விஜித ஹேரத் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘இச்சம்பவத்தை பயன்படுத்தி எவரும் வீண் அச்சத்தை ஏற்படுத்த முற்படக்கூடாது. அரசியல் ஆதாயம் தேடவும் முற்படக்கூடாது. பொறுப்பான அரசு என்ற அடிப்படையில் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மக்களும் கட்டுக் கதைகளை நம்பக்கூடாது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் விரைவில் இயல்பு நிலை திரும்பும்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வெளிநாட்டு தூதுவர்கள் திருப்தி அடைந்துள்ளனர். நேற்று முன்தினம்கூட இஸ்ரேலியர்கள் வருகை தந்துள்ளனர். அமெரிக்காவால் பயண தடை விதிக்கப்படவில்லை. பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இவ்வாறு பயண எச்சரிக்கையை விதித்துள்ள நாடுகள் அவற்றை விரைவில் நீக்கும் என நம்புகின்றோம்.” – என்றார்.