நாடாளுமன்ற அமர்வு நேரங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி செப்டம்பர் 22 ஆம் திகதி முதல் நாடாளுமன்ற அமர்வுகள் முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகி, பிற்பகல் 5.30 மணிவரை நடைபெறும். பிற்பகல் 4.30 மணி முதல் 5.30 மணிவரை சபை ஒத்திவைப்பு பிரேரணைமீதான விவாதம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாடாளுமன்றம் செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் பகல் ஒரு மணிக்கும், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் முற்பகல் 10 மணிக்கும் கூடுகின்றது. மாலை 6.30 அல்லது 7.30 மணிவரை சபை அமர்வு நடைபெறும். இந்த நேர கட்டமைப்பே அடுத்த தொடர் முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான வாய்மூல விடைக்கான கேள்விகள் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. முற்பகல் 10.00 மணி முதல் முற்பகல் 11.00 வரையான காலம் இதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.