பிணையில் விடுவிக்கப்பட்டவர் வெட்டிக்கொலை: வவுனியாவில் பயங்கரம்!

வவுனியா, சுந்தரபுரத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

சுந்தரபுரம் பகுதியில் வசித்து வந்த சுந்தரலிங்கம் சுகந்தன் என்ற 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மரணமடைந்த மேற்படி நபர் கடந்த தீபாவளி தினத்தன்று தனது மாமியாரைத் துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்திய வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை இடம்பெற்று வரும் நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் நேற்று இரவு 11:30 மணியளவில் தனது வீட்டுக்கு அருகில் சென்று கொண்டிருந்தபோதே கூரிய ஆயுதத்தால் இவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தத் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இவரது மைத்துனர் ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் தடவியல் பொலிசாரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles