தனது கல்வித் தகைமை தொடர்பான சான்றிதழ்களையும், ஆவணங்களையும் நாடாளுமன்றத்தில் நேற்று முன்வைத்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அவை பொய்யென எவரேனும் நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுவதற்கு தயார் எனவும் அறிவித்தார்.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜயத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியது.
ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், நேற்று முன்தினம் உறுதியளித்தவாறு தனது கல்வித் தகைமைகள் தொடர்பான சான்றிதழ்களையும், ஆவணங்களையும் சஜித் பிரேமதாச சபையில் சமர்ப்பித்தார்.
ஆரம்பக் கல்வி முதல் தரம் 9வரை தான் இலங்கையில் கல்வி பயின்றுள்ளதாகவும், இலங்கையில் சாதாரணதரப்பரீட்சை எழுதவில்லை எனவும், 83, 84 காலப்பகுதியில் இங்கிலாந்தில் வைத்தே சாதாரணதரப்பரீட்சை எழுதி சித்தியடைந்தாகவும் சஜித் குறிப்பிட்டார். தனது பரீட்சை பெறுபேறுகளையும் அவர் வெளிப்படுத்தினார்.
“ நான் சாதாரணதரப்பரீட்சையில் சித்தியடையவில்லை என கடந்த காலங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவந்தன. ஆனால் 1986 ஆம் ஆண்டு உயர்தரம் சித்தியடைந்து 1991 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பட்டப்படிப்பையும் நிறைவு செய்து, பட்டம் பெற்றுள்ளேன். அது தொடர்பான சான்றிதழையும் சமர்ப்பிக்கின்றேன்.
அதன் பின்னர் அமெரிக்காவில் எம்.ஏ. பட்டப்படிப்பையும் தொடர்ந்திருந்தேன். எனினும், 1993 மே முதலாம் திகதி எனது தந்தையின் மரணத்தையடுத்து அரசியலுக்கு வந்ததால் அதனை பூர்த்தி செய்ய முடியாமல்போனது. ஒன்றரை வருடங்கள் இருந்திருந்தால் எம்.ஏ. படிப்பையும் நிறைவு செய்திருப்பேன். அமெரிக்காவில் இருந்த காலப்பகுதியில் குடியரசுக் கட்சியின் செனட்டர் ஒருவருடன் பணியாற்றியுள்ளேன்.
இலங்கையில் 2021 ஆம் ஆண்டு திறந்த பல்கலைக்கழகம் சென்றேன். தற்போதைய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அங்கு விரிவுரையாளராக இருந்தார். மாஸ்டர்ஸை பெறுவதற்கு முயற்சித்தேன். எதிர்க்கட்சி தலைவராக செயற்பட்டுக்கொண்டுதான் கல்வி கற்றேன். தற்போதைய பிரதமரும் எனக்கு பாடம் எடுத்துள்ளார். அவர் சிறந்த ஆசிரியர்.
2022 இல் ஏற்பட்ட சூழ்நிலையால் கல்வி நடவடிக்கையை தொடரமுடியாமல்போனது.
சமூகவலைத்தளங்களில் எழுந்த விமர்சனங்களை நான் கவனத்தில் கொள்ளவில்லை. எனினும், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வி எழுப்பியதால்தான் சான்றிதழ்களையும், ஆவணங்களையும் முன்வைத்துள்ளேன்.
நான் வெளிப்படுத்திய அனைத்து தகவல்களுக்கும் பொறுப்பேற்கின்றேன். நான் பொய்யுரைத்துள்ளேன் என்பதை எவரேனும் நிரூபித்தால் எம்.பி. பதவியை துறந்து, அரசியலில் இருந்து விலகுவதற்கு தயார்.” – எனவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.










