பிரமாண்ட மாளிகை – 8 ஜெட் விமானங்கள்.. 700 கார்கள் – உலகின் பணக்கார குடும்பம் இதோ….

துபாயின் அல் நஹ்யான் அரச குடும்பம் ரூ. 7 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட மதிப்பிலான அதிபர் மாளிகை, 8 தனியார் ஜெட் விமானங்கள் மற்றும் பிரபலமான கால்பந்து கிளப் ஆகியவற்றைக் கொண்டு உலகின் பணக்காரர்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபராக இருப்பவர், ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான். அரச குடும்பத்திற்கு தலைமை தாங்கும் இவருக்கு 18 சகோதரர்கள் மற்றும் 11 சகோதரிகள் உள்ளனர். எமிராட்டி அரச குடும்பத்திற்கு 9 குழந்தைகள் மற்றும் 18 பேரக்குழந்தைகள் உள்ளனர். உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் ரிசர்வில் சுமார் 6 வீதம் இந்த ஒரு குடும்பத்திற்கு மட்டுமே சொந்தமானதாக இருக்கிறது.

அது மட்டுமின்றி, மான்செஸ்டர் சிட்டி கால்பந்து கிளப் மற்றும் பாடகர் ரியானாவின் பியூட்டி பிராண்டான ஃபென்டி முதல் எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் வரை பல பிரபலமான நிறுவனங்களில் பங்குகளைக் கொண்டுள்ளது. அபுதாபி ஆட்சியாளரின் இளைய சகோதரர் ஷேக் ஹமத் பின் ஹம்தான் அல் நஹ்யானிடம் 700க்கும் மேற்பட்ட கார்கள் உள்ளன.

இதில் 5 புகாட்டி வேய்ரான்கள், லம்போகினி ரெவென்டன், மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்கே ஜிடிஆர், ஃபெராரி 599 எக்ஸ்எக்ஸ் மற்றும் மெக்லாரன் எம்சி12 என பல சொகுசு கார்கள் உள்ளன.

அபுதாபியில் உள்ள கில்டட் காஸ்ர் அல்-வதன் அதிபர் மாளிகையில்தான் இந்த குடும்பம் இப்போது வசித்து வருகிறது. அமீரகத்தில் இருக்கும் பல அரண்மனைகளில், இதுதான் மிகப்பெரியது. சுமார் 94 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துகிடக்கும் இந்த மாளிகை, சுமார் 350,000 படிகங்களால் ஆனது. இதில் பல வரலாற்று மதிப்புமிக்க கலைப்பொருட்கள் உள்ளன. அதிபரின் சகோதரரான தஹ்னூன் பின் சயீத் அல் நஹ்யான் என்பவர்தான் குடும்பத்தின் பிரதான முதலீட்டு நிறுவனத்திற்குத் தலைமை தாங்குகிறார்.

Related Articles

Latest Articles