மஸ்கெலியா பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் ராஜ் அசோக்கின் வேண்டுகோளுக்கு இணங்கவும், அவரது தொடர் முயற்சியின் பலனாகவும் கருங்கல்லிலான இரண்டு அடி உயரத்தைக் கொண்ட சிவலிங்கம் (பீடத்துடன்) மற்றும் நந்தி சிலை என்பன ஆலய பரிபாலன சபை நிர்வாகத்திடம் வழங்கப்பட்டுள்ளன.
2026 ஆகஸ்ட் 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 6.00 மணிக்கு இடம்பெற்ற இந்நிகழ்வில், தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆச்சிரம முதல்வரும் ‘சாதனைத் தமிழன்’ விருது பெற்றவருமான கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள், தொண்டர்களுடன் நேரடியாக வருகை தந்து, மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில் வைத்து இச்சிலைகளை வழங்கி வைத்தார்.
இதன் மூலம், இனிவரும் காலங்களில் பிரவுன்லோ தோட்ட மக்கள் தமது சொந்த ஆலயத்திலேயே சிவவழிபாட்டைச் சிறப்புற மேற்கொள்ள முடியும்.
எதிர்வரும் மாதங்களில் இவ்வாலயத்தின் புனருத்தாரணப் பணிகள் நிறைவுபெற்று மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், இவ்வாறான பெறுமதிமிக்க தெய்வச் சிலைகள் அன்பளிப்பாகக் கிடைக்கப்பெற்றமை குறித்து அப்பகுதி மக்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சிய அடைந்துள்ளனர்.
மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்










