கடும் எதிர்ப்பையும் மீறி நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பதற்கு அரசாங்கம் முற்பட்டால், நாட்டில் மீண்டும் ஓர் இளைஞர் புரட்சி வெடிக்கக்கூடும் என ஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே, ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான வஜீர அபேவர்தன இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்:
“உதாரணமாக, எமது நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பில் இடம்பெறும் பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் மற்றும் முடக்கல் நடவடிக்கைகள் காரணமாக, 4 வருடங்களில் பட்டம் பெற்று வெளியேற வேண்டிய மாணவர் ஒருவர், பட்டம் பெற 7 வருடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. ஆனால் வெளிநாடுகளில் 22 வயதிலேயே மாணவர்கள் சிறப்புப் பட்டம் பெற்று விடுகின்றனர்.
அதேபோலவே, அரசு சேவைகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு, 35 வயதிலேயே ஆட்சேர்ப்புகள் இடம்பெறுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் துறையில் 25 வயதிலேயே வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
நிலைமை இவ்வாறு இருக்கையில், ஒரு குறிப்பிட்ட தரப்பினரின் சேவைக்காலத்தை மட்டும் நீடித்தால், அது நாட்டில் மீண்டும் ஓர் இளைஞர் கிளர்ச்சிக்கே வழிவகுக்கும்.
பொதுவாக ஒரு வருடத்தில் 2 இலட்சம் பேர் வரை ஓய்வுபெறுகின்றனர். இதன் மூலம் போட்டிப் பரீட்சைகள் ஊடாக 2 இலட்சம் இளைஞர்களுக்கு புதிதாக வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன.
நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவும் சூழ்நிலையில், பதவிக் காலத்தை நீடிக்கும் முடிவை எடுத்தால், அது இளைஞர்களின் வாய்ப்புகளைப் பறித்து மீண்டும் ஒரு புரட்சிக்கு வித்திடும். இளைஞர்கள் தங்களின் பொன்னான இளமைக் காலத்தை இழக்க நேரிடும்.
மூத்த அதிகாரிகளின் மனித வளத்தைப் பயன்படுத்திக்கொள்ள விர விரும்பினால், அவர்கள் ஓய்வுபெற்ற பின்னரும் ஆலோசகர்களாகப் சேவையைப் பெற முடியும். அதை விடுத்து சேவைக்காலத்தை நீடித்தால் பாரிய சிக்கல்களே ஏற்படும். அரசியல் ரீதியாக தற்கொலை செய்துகொள்ளும் இத்தகைய முடிவை அரசாங்கம் எடுக்குமானால், அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?” என்று வஜீர அபேவர்தன கேள்வி எழுப்பினார்.










