ஒவ்வொரு நாடாளுமன்ற அமர்விலும் முதல் நாளன்று (செவ்வாய்கிழமை) கொரோனா நிலைவரம் தொடர்பில் இனிமேல் அறிவிப்பு விடுக்கப்படும் – என்று சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி தெரிவித்தார்.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது ஒழுங்குப்பிரச்சினையொன்றை எழுப்பிய ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க,
“ பிரிட்டன் நாடாளுமன்றத்தில் புதிய நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி ஒவ்வொரு நாடாளுமன்ற அமர்வின்போதும் கொரோனா நிலைவரம் தொடர்பில் சுகாதார அமைச்சர் அல்லது பிரதமர் நாடாளுமன்றத்தில் அறிவிப்பு விடுக்க வேண்டும். எனவே, இங்கும் சுகாதார அமைச்சர் அவ்வாறு செய்வது நல்லது. அமைச்சரவை திங்கட்கிழமை கூடும். எனவே, செவ்வாய்க்கிழமை அறிவிப்பை விடுக்கலாம்.” – என சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த சுகாதார அமைச்சர்,
“ இது நல்ல யோசனை. கேள்விகளுக்கான பதிலாக அல்லாமல், நாட்டின் உண்மை நிலைவரம் தொடர்பில் நாடாளுமன்ற அமர்வு நாட்களில் செவ்வாய்கிழமை அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.” – என்றார்.
நாடாளுமன்றம் மாதம் இரு தடவைகள் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது சபை அமர்வு 8 நாட்கள் நடைபெறும்.
