பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக முன்னாள் சர்வாதிகாரியின் மகன் அமோக வெற்றி

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் சர்வாதிகாரியின் மகன் பெர்டினன்ட் ‘பொங்பொங்’ மார்கோஸ் ஜூனியர் அமோக வெற்றியீட்டியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் முடிவுகளின்படி தற்போது செனட்டராக இருக்கும் மார்கோஸ் 55.8 வீத வாக்குகளை வென்றிருப்பதோடு அவரது போட்டியாளரான லெனி ரொப்ரேடோ 28 வீத வாக்குகளை பெற்றுள்ளார்.

இதன்மூலம் 36 ஆண்டுகளுக்குப் பின்னர் பிலிப்பைன்ஸில் மீண்டும் மார்கோஸ் குடும்பம் ஆட்சிக்கு வந்துள்ளது.

முன்னர் அவரது குடும்பம் ஆட்சியில் இருந்தபோது பெரும் ஊழல் இடம்பெற்றதாகக் கூறுகின்றபோதும், அவரது ஆதரவாளர்கள் அதனை ஒரு பொற்காலமாக குறிப்பிடுகின்றனர்.

அவரது தந்தையான முன்னாள் ஜனாதிபதி பேர்டினன்ட் மார்கோஸ், அவரது கொடிய ஆட்சியால் தொடர்ந்து நினைவுகூரப்படுபவராக உள்ளார். மார்கோஸ் மற்றும் அவரது மனைவி இமெல்டா பொது நிதியில் இருந்து 10 பில்லியன் டொலர்களை கொள்ளையடித்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது. அவர் 1986 இல் மக்கள் எழுச்சி போராட்டத்தின் மூலம் பதவி கவிழ்க்கப்பட்டார்.

அவரது காலப்பகுதியில் பிலிப்பைன்ஸ் பெரும் கடன் பிரச்சினைக்கு முகம்கொடுத்ததோடு சாதாரண மக்கள் நெருக்கடியை சந்தித்தனர்.

64 வயதான மார்கோஸ் ஜூனியர் அரசியலுக்கு புதியவரல்ல. கடந்த பல ஆண்டுகளில் தேர்தல்களில் வெற்றியீட்டி பல பதவிகளை வகித்துள்ளார். எனினும் 2016 ஆம் ஆண்டில் துணை ஜனாதிபதிக்கான தேர்தலில் ரொப்ரேடோவிடம் தோல்வியை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்தல் பிரசாரத்தில் தமது குடும்பத்தின் உண்மை பற்றி இணையத்தில் போலியான தகவல்களை பரப்பி, சுயாதீன விசாரணைகளுக்கு முகம்கொடுப்பதை தவிர்க்கும் வகையில் விவாதங்கள் மற்றும் ஏனைய விடயங்களை தவிர்த்ததாக போட்டியாளர்கள் விமர்சித்தனர். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் மார்கோஸ் ஜூனியர் கருத்துக் கணிப்புகளிலும் முன்னிலை பெற்றிருந்தார்.

இந்நிலையில் நாட்டின் கடும்போக்கான தலைவர் என்று அழைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடெர்டேவுக்கு பதில் புதிய தலைராக அவர் பதவி ஏற்கவுள்ளார்.

டுடெர்டேவின் போதைக் கடத்தல் மற்றும் பயன்பாட்டுக்கு எதிரான கடும் நடவடிக்கை சர்வதேச அளவில் கடும் விமர்சனத்துக்கு காரணமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. அவரது இந்த நடவடிக்கையால் பொலிஸ் விசாரணைகள் இன்றி ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அவரது மகள் சாரா டுடெர்டே, இந்தத் தேர்தலில் மக்ரோஸ் ஜூனியருடன் சேர்ந்து துணை ஜனாதிபதிக்காக போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றிருப்பதாக ஆரம்பக்கட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles