“பிள்ளைகளை வழங்கமாட்டோம் – நாமே வளர்ப்போம்” – உறவினர்கள் திட்டவட்டம்! நேரடி ரிப்போட்

பசறை 13ஆவது மைல் கல்லருகே கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்ற தனியார் பஸ் விபத்தில் பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளை தத்தெடுக்க வைத்தியரொருவர் முன்வந்துள்ள போதிலும், பிள்ளைகளை தத்துக்கொடுப்பதற்கு அவர்களின் அம்மம்மா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தாமே அவர்களை வளர்க்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

அம்பாறை வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் வஜிர ராஜபக்ச என்பவரே பெற்றோரை இழந்த மூன்று பிள்ளைகளையும், தாம் பொறுப்பேற்பதற்கான சட்டரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,பசறைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வைத்தியரின் இக் கோரிக்கை குறித்து, பசறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பதுளை மஜிஸ்ரேட் நீதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

இப் பஸ் விபத்தில் லுணுகலையைச் சேர்ந்த அடாவத்தை தோட்டத்தின் அந்தோனி நோவா தமக்கான கண் சிகிச்சையை மேற்கொள்ள தனது மனைவியான பெனடிக் மெரோனாவுடன், பதுளை அரசினர் மருத்துவமனைக்கு புறப்பட்டார். அவ் வேளையில் காலையில் பதுளை செல்லும் பஸ் சென்றுள்ளதை அறிந்ததும், அவ்விருவரும் ஆட்டோவொன்றில் புறப்பட்டு, தவறவிட்ட பஸ்சைப் பிடித்து ஏறினர்.

அப் பஸ்சே விபத்துக்குள்ளாகியது. அவ்விபத்தில் இத் தம்பதிகள் உள்ளிட்டு 15 பேர் பலியாகினர். இத்தம்பதிகளின் இரு பெண்பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையுமாக மூன்று பிள்ளைகளும் தமது பாட்டியின் அரவணைப்பிலேயே இருந்து வருகின்றனர். அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருந்தது.

இந்நிலையில், டாக்டர் வஜிர ராஜபக்சவும், அவரது மனைவி தரங்கா விக்கிரமரட்னவும், விபத்தில் பெற்றோரை இழந்த 9, 8, 3 வயதுகளையுடைய மூன்று பிள்ளைகளையும் சட்ட ரீதியாகவே தத்தெடுத்து பொறுப்பேற்க முன்வந்துள்ளனர்.

” எனது மகளும் மருமகனும் இல்லாத நிலையில் அவர்களின் மூன்று பிள்ளைகளையும் படிக்க வைத்து, அவர்களை நல்லதோர் நிலைக்கு கொண்டு செல்வதே எனது குறிக்கோள். எனது மகனினதும், மருமகனினதும் பிள்ளைகள் குறித்த எதிர்காலக்கனவை நனவாக்க வேண்டும். இப்பிள்ளைகளை எவருக்கும் கொடுக்க என்னால் அனுமதிக்க முடியாது. பிள்ளைகள் மூவரையும் பிரிந்துவிட்டேனென்றால் எனக்கு பைத்தியமே பிடித்து விடுமென்று, பிள்ளைகளின் அம்மம்மா ஐயாசாமி செல்வநாயகி குறிப்பிட்டார்.

பெற்றோர் இல்லாத நிலையில், மூன்று பிள்ளைகளையும் எவரிடமாவது ஒப்படைக்க திட்டமிட்டுள்ளீர்களா? என்று நான் வினவிய போது, பிள்ளைகளின் அம்மம்மா ஐயாசாமி செல்வநாயகி மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், ‘ எனது மகளும், மருமகளும் இல்லாத பெரும் துயரில் நானும், பெற்றோர் இல்லாத நிலையில் பிள்ளைகள் மூவரும் பெரும் சோகதிலுமே இருந்து வருகின்றோம். அச் சோகத்திலிருந்தும், துயரிலிருந்தும் நாம் இன்னும் மீளவில்லை. இந்நிலையில் எமது துயரிலும், சோகத்திலும் பலர் குளிர்காய்ந்து கொண்டிருக்கின்றனர்.

எமக்கு உதவி செய்வதாக பலர் முகநூல்களிலும், வலையத் தளங்களிலும், இணையங்களிலும், ஊடகங்களிலும் கூறுகின்றார்களேயன்றி, எவரும் இதுவரையில் உதவி செய்ததாக இல்லை. பேரும் புகழும் பெறுவதற்காகவே இவ்வகையில் பலர் நடித்துக் கொண்டிருக்கின்றனர். சமூக சேவகர்களாக காட்டிக் கொண்டும் செயற்படுகின்றனர். மக்கள் பிரதிநிதிகளும் எம்மை வந்து பார்க்கவில்லை.

யார் உதவி செய்தாலும், செய்யாவிட்டாலும், எனது பேரப்பிள்ளைகளை படிப்பித்து, நல்லதோர் நிலைக்கு கொண்டு வருவேன். இம் மூவருமே எனது சொத்துக்கள். எவரிடமும் கையேந்த மாட்டேன். பிள்ளைகள் பெற்றோர் இல்லாத குறை மட்டுமே. அவர்கள் அனாதைகளல்லர். இரு பக்கத்திலும் உறவினர்கள் பலர் உள்ளனர்.

எனக்கு எவரும் இல்லை. ஆகையினால் உதவி செய்யுமாறு கோரி, நான் கூறுவதாக நிர்ப்பந்திக்கப்படுகின்றேன். சமூக வளையத்தளங்களில் வீரர்களாக, சமூக சேவையாளர்களாக காட்டிக் கொள்ளுபவர்கள், ஒருசில ஊடகத்தினர், பெரும்பான்மையின ஊடகத்தினர் ஆகியோரை, என்னை நிர்ப்பந்திக்கின்றனர். இம் மூன்று பிள்ளைகளை நல்ல நிலைக்கு கொண்டுவர என்னால் முடியும். எமது உறுவினர்களும் எம்முடன் இருக்கின்றனர். எமது திருச்சபையும், அருட்தந்தைகளும், அருட்சகோதரிகளும் எம்முடனேயே உள்ளனர்.

எமது இக்கட்டான நிலையை முன்னிலைப்படுத்தி, குழப்பகரமான சூழல், நிலையை எவரும் ஏற்படுத்த வேண்டாம். இது போன்ற செயலானது எனக்கும், எனது உறவினர்களுக்கும் பெரும் கவலையாகவும், மனவேதனையாகவுள்ளது’ என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

அருட்தந்தை யூஜின்

அருட்தந்தை யூஜின் கருத்துத் தெரிவிக்கையில், ‘நோவா நான் வளர்த்த பிள்ளை. நோவா வளர்ந்ததும் எனக்கு உதவியாளராகவே இருந்து வந்தார். அவருக்கு மெரோனாவை, நானே திருணமம் செய்து வைத்தேன். கத்தோலிக்க மதக் கோட்பாடுகளுடன் அவர்களின் குடும்பம் வாழ்ந்து வந்தது. நோவாவின் பக்கத்திலும், மெரோனாவின் பக்கத்திலும் உறவினர்கள் நிறையபேர் இருந்து வருகின்றனர்.

நோவாவும், மெரோனாவும் விபத்தில் பலியானது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பேயாகும். ஆனாலும், அவர்களின் பிள்ளைகள் மூவருக்கும் தாயின் பக்கத்திலும், தகப்பனின் பக்கத்திலும் நிறையவே உறவினர்கள் உள்ளனர். அம்மம்மாவிடம் பிள்ளைகள் மூவர் இருந்தாலும் அப்பம்மாவும் அப்பிள்ளைகள் மீது பாசம் கொண்டவராகவே இருந்து வருகின்றார்.

அத்துடன் உறவினர்கள் அனைவருமே இம் மூன்று பிள்ளைகளுடன் பற்று, பாசம் மிக்கவர்களாகவே காணப்படுகின்றனர்.

நோவாவும், அவரது குடும்பத்தினரும் அப்புத்தளைப் பகுதி ககாகொல்லை தோட்டத்தினைச் சேர்ந்தவர்கள். நான் அப்புத்தளையின் பங்குத் தந்தையாக இருக்கும் போது, அவர்கள் என்னுடன் பற்றுருதி கொண்டவர்களாக இருந்தனர். அக்காலப் பகுதியிலிருந்தே நோவைவை நான் வளர்த்தேன்.

அதன் பிறகு லுணுகலை பங்குத் தந்தையாக கடமையாற்றினேன். அவ்வேளையில், மெரோனாவை நோவாவிற்கு திருமணம் செய்து வைத்தேன். அவர்கள் இல்லாத நிலையில், அப் பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கும், அருட்சகோதரிகளுக்கும், கத்தோலிக்க திருச்சபைக்கும் இருந்து வருகின்றது. அக்கடமையை பொறுப்புடன் நாம் மேற்கொள்வோம்.

நோவாவும், மெரோனாவும் இல்லாத நிலையில் பிள்ளைகள் மூவரும் அவர்களின் அம்மம்மா, அப்பம்மா, நோவாவின் தங்கை மொனிடா ஆகியோரிடம் தான் இருக்க வேண்டும். பிள்ளைகளுக்கு உதவி செய்பவர்கள் இருப்பின், அப்பிள்ளைகளின் வங்கி வைப்புப் புத்தகங்களுக்கு பணம் வைப்பீடு செய்து உதவலாம். அத்துடன் பிள்ளைகள் 18 வயதுகளை அடைந்ததும், அப்பணம் அவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

பிள்ளைகள் மூவரும் வலு கெட்டிக்காரர்கள். அவர்களின் எதிர்காலம் சிறப்பாகவே அமையும். தாய், தகப்பன் இல்லாத குறைமட்டுமே அவர்களுக்கு உண்டு. உறவுகள் அனைத்தும் அப்பிள்ளைகளைத் தாங்கவே செய்வர். அத்துடன் நானும், அருட்சகோதரிகளும், கத்தோலிக்க திருச்சபையும் என்றுமே அவர்களுடன் இருப்போம். நோவா – யூஜினியா ஒன்பது வயது, நோவா எரோன் – எட்டு வயது, நோவா – இவேஞ்சலினா – நான்கு வயது ஆகிய மூவருக்கும் பாதுகாப்பாகவும், வழிநடாத்துனர்களாகவும் தொடர்ந்தும் செயற்படுவோம். அவர்கள் அனாதைகளல்லர்.

சமூக வலையத்தளங்கள், முகநூல், இணையத்தளங்கள், ஒரு சில ஊடகங்கள் இக்குடும்பத்தினர், பிள்ளைகள் மூவர் குறித்து உண்மைக்குப் புறம்பான விடயங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். இத்தகையவர்களை நினைக்கும் போது, ஆத்திரம் மேலிடுகின்றது. இம் மூன்று பிள்ளைகளும் அனாதரவற்றவர்களல்லர். அவர்களின் பின்னணி ஆரோக்கியமான சூழலைக் கொண்டிருக்கின்றது. கத்தோலிக்க திருச்சபையே, பிள்ளைகள் மூவரது பாதுகாப்பு அரணாக இருந்து வருகின்றது. அத்துடன் அப்பிள்ளைகள் கல்வியில் வளர்ச்சியடைந்து பல்கலைக்கழகம் வரை சென்று, அவர்களின் வாழ்க்கையை ஒளிமயமானதாக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

நான் தற்போது யாழ்ப்பாணத்தில் கடமையாற்றுவதினால் அடிக்கடி லுணுகலைக்கு போக முடியாத நிலை இருந்த போதிலும், தேவையேற்படும் போதெல்லாம் லுணுகலை சென்று, அப்பிள்ளைகளைப் பார்த்து வருவேன்’ என்றார்.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles