பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேவின் புற்றுநோய் தீவிரம் அடைந்திருப்பதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை குறிப்பிட்டுள்ளது.
மூன்று முறை உலகக் கிண்ணத்தை வென்ற 82 வயதான பீலே மூன்று வாரங்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கிறிஸ்மஸ் தினத்தையும் மருத்துவமனையிலேயே கழிப்பார் என்று அவரது மகள் தெரிவித்துள்ளார்.
‘தற்போது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைத் தள்ளிவைத்துள்ளோம். தந்தையுடன் மருத்துவமனையில் நேரம் செலவழிப்பது நல்லது என முடிவெடுத்துள்ளோம்’ என்று அவர் குறிப்பிட்டார்.
பீலேவின் தற்போதைய புற்றுநோய் வளர்ந்து வருவதாகவும் சிறுநீரக மற்றும் இதய செயலிழப்புகளை தவிர்க்க தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் இஸ்ராலிடா அல்பர்ட் ஐன்ஸ்டைன் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கடந்த 2021 செப்டெம்பரில் பெருங்குடலில் இருந்து கட்டி ஒன்று அகற்றப்பட்டது தொடக்கம் பீலே தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.