புசல்லாவை இந்து தேசிய கல்லூரிக்கு முன்பாக பெற்றோர் போராட்டம் – கல்வி நடவடிக்கை இடைநிறுத்தம்!

புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில் மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறுகோரி பெற்றோர்கள் சிலர், பாடசாலை வளாகத்தில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் பாதுகாப்புகருதி பாடசாலையில் இன்று கல்வி நடவடிக்கை இடம்பெறவில்லை. பாடசாலைக்கு சமுகமளித்திருந்த ஆசிரியர்களும், மாணவர்களும் திருப்பிச்சென்றனர்.

பாடசாலைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் அதிகாரிகள் இன்று பாடசாலைக்கு வரவுள்ளனர். விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. அந்த கலந்துரையாடலின் பின்னரே அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் முடிவெடுக்கப்படும் என தெரியவருகின்றது.

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி, இந்து தேசிய கல்லூரி பாடசாலை மைதானத்தில் நேற்று சிறுவர் தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

நிகழ்வு முடிவடைந்த பின்னர் மாணவர்கள் வகுப்பறைகளுக்கு திரும்பியுள்ளனர்.

தரம் 10 இல் கல்வி பயின்ற ராஜரட்னம் சதுர்சன் (வயது – 15) என்ற மாணவன் சக மாணவர்களுடன் இணைந்து வகுப்பறையில் விளையாடியுள்ளார்.

மேசைமீது ஏறி விளையாடுகையில்,  இயங்கிக்கொண்டிருந்த மின் விசிறியில் அவரின் தலை பகுதிபட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மாணவன் வகுவப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கிருந்து ஒரு மணிநேரத்துக்கு பின்னர் கம்பளை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். எனினும், அவர் உயிரிழந்துவிட்டார்.

இந்நிலையிலேயே குறித்த மாணவனின் வகுப்பாசிரியரை இடமாற்ற வேண்டும், பாடசாலை அதிபரை இடமாற்ற வேண்டும், மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி பெற்றோர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வகுவப்பிட்டிய வைத்தியசாலைக்கு முன்பாகவும் அவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்படுகின்றது.

புசல்லாவை பவன்

Related Articles

Latest Articles