புசல்லாவை, செல்வகந்த பாலத்தை புனரமைப்பதற்கான பணி ஆரம்பம்!

புசல்லாவை பாரதெக்க – செல்வகந்த கீழ்பிரிவு கிராமத்துக்கு செல்வதற்கான பாலத்தை புனரமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

இதன்படி பெருந்தோட்ட மனிதவள நிதியத்தினால் பொறியியலாளர் ஒருவர் அனுப்பப்பட்டு, குறித்த பாலத்தை புனரமைப்பதற்கு தேவையான ஏற்பாடுகள், செலவீனம் உள்ளிட்ட விவரங்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய, இதொகாவின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமியின் கண்காணிப்பின்கீழ் இதற்கான திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

கண்டி மாவட்டம், புசல்லாவை, பாரதெக்க – செல்வகந்த கீழ்பிரிவுக்கு செல்வதற்கான பாதையில் உள்ள பாலம் சேதமடைந்து உடைந்து விழும் அபாயத்தில் உள்ளமை தொடர்பான செய்தியை ‘மலையக குருவி’ பதிவிட்டிருந்தது.

மேற்படி கிராமத்தில் சுமார் 70 குடும்பங்கள் வாழ்கின்றன. மழை காலங்களில்  மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அச்சத்துடனேயே பாலத்தை கடக்கவேண்டியுள்ளது.

பாலம் சேதமடைந்தும், வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதால் வாகனங்கள்கூட அப்பகுதிக்கு வருவதில்லை. பிரதான வீதிக்கு நடந்துவருவதாக இருந்தால்கூட கடும் போராட்டம்தான். பாடசாலை மாணவர்கள், முதியவர்கள், நோயாளிகள் என பலரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

இப்பாலத்தையும், வீதியையும் புனரமைத்துதருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பான செய்தியை அவதானித்த பின்னர் கிராம மக்களை, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி பேச்சுக்கு அழைத்திருந்தார். கிராம மக்களின் பிரதிநிதியாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் நிர்வாகப் பிரிவின் உதவிப்பணிப்பாளர் ஐயம்பெருமாள் ரவிக்குமார் சந்திப்பில் பங்கேற்றிருந்தார். மக்களின் மனுவையும் கையளித்திருந்தார்.

இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கு பாரத் அருள்சாமி கொண்டுவந்தார். தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

இதற்கமைய தற்போது ஆரம்பக்கட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
தமது கோரிக்கையை ஏற்று நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதற்காக அமைச்சர் ஜீவன் தொண்டமான், உப தலைவர் பாரத் அருள்சாமி உள்ளிட்டவர்களுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles