ரஷ்ய ஜனாதிபதி புடின், முற்றிலும் பைத்தியமாகி விட்டார் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடும் சீற்றம் வெளியிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடான உக்ரைன் – -ரஷ்யா இடையே மூன்று ஆண்டுகளை கடந்து போர் நீடிக்கிறது. அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதும் போரை நிறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவ்வப்போது தற்காலிக போர் நிறுத்தம், பிடிபட்ட கைதிகளை விடுவிப்பது என சமரசம் ஏற்பட்டாலும் நிரந்தர போர் நிறுத்தத்துக்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட நகரங்கள் மீது, 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை உக்ரைன் ஏவியது. இதையடுத்து, உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களில் ட்ரோன்கள், ஏவுகணைகளை ரஷ்யா ஏவியது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.
இதனால், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். நேற்று நியூஜெர்ஸியில் பேட்டியளித்த அவர், “நிறைய பேரை புடின் கொல்கிறார். அவருக்கு என்னவாயிற்று என தெரியவில்லை,” என்றார்.
இந்நிலையில், நேற்று தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், ‘புடினுக்கு முற்றிலுமாக பைத்தியம் பிடித்துவிட்டது’ என ஆவேசமடைந்துள்ளார்.
அதேவேளை, போர் நிறுத்தத்துக்கு புடின் மறுப்பதால், ரஷ்யா மீது, இந்த மாதம் ஏராளமான தடைகளை ஐரோப்பிய யூனியன் நாடுகள் விதித்துள்ளன. ஆனால், ரஷ்யா மீது கூடுதல் வரிகளை விதிக்கப்போவதாக அடிக்கடி கூறும் டிரம்ப், இதுவரை அதுபோன்று எதுவும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.