புதிய அரசியலமைப்பு தொடர்பான சட்டமூலத்தை இவ்வருடத்துக்குள் நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
புதிய அரசியலமைப்புக்கான யோசனைகள் அடங்கிய வரைவு நகலை முன்வைப்பதற்காக அரசாங்கத்தால் 11 பேரடங்கிய நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்பட்டது.
மேற்படி குழு பொது மக்கள் உட்பட அனைத்து தரப்பினரிடமும் மின்னஞ்சல் மற்றும் பதிவுத்தபால்மூலம் கருத்துகளை கோரியது. இதன்படி பல தரப்பினரும் யோசனைகளை முன்வைத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி உட்பட பல கட்சிகளும் காத்திரமான முன்மொழிவுகளை அனுப்பிவைத்துள்ளன.
புதிய அரசியலமைப்புக்கான இக்குழுவின் யோசனை எதிர்வரும் மார்ச்சில் அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அதன்பின்னர் புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டு, அமைச்சவை அனுமதி உட்பட சட்டபூர்வமான ஏற்பாடுகள் எல்லாம் பூர்த்தியான பின்னர் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.
தனது இரண்டாவது பதவிகாலம் முடிவடைவதற்குள் புதிய அரசியலமைப்பு நடைமுறைக்குவரும் என்ற உறுதிமொழியை ஜனாதிபதி வழங்கியுள்ளார். இதன்படி 2021 இற்குள் புதிய அரசியலமைப்பு இயற்றப்படும் எனவும் அறியமுடிகின்றது.
சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாத வகையில் புதிய அரசியலமைப்பை இயற்றுவதே அரசாங்கத்தின் திட்டமாக இருக்கின்றது. தேசியக்கொடி, தேசிய கீதம் உட்பட 12 பிரதான விடயங்களை மாற்றுவதாக இருந்தால் மட்டுமே சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லவேண்டிய நிலை ஏற்படும். எனினும், அந்த 12 விடயங்களில் மாற்றம் ஏற்படாது என தெரியவருகின்றது.