‘புதிய அரசில் அமைச்சுப் பதவிகள் பெறும் எண்ணம் இல்லை’

“புதிய அரசில் அமைச்சுப் பதவி பெறும் எண்ணம் எதுவுமே எம்மிடம் இல்லை. இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அப்படியான கொள்கையை இல்லை. தேர்தல் காலத்தில் அமைச்சுப் பதவி பற்றி பேச வேண்டிய அவசியமும் இல்லை.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் திட்டவட்டமாக இடித்துரைத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் களமிறங்கியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கடந்த 11ஆம் திகதி வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போது, ‘அரசியல் தீர்வு கிடைக்க எவ்வளவு காலம் எடுக்கும் எனச் சொல்ல முடியாது.

அந்த இடைப்பட்ட காலத்தில் நாங்கள் எமது பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்வது அத்தியாவசிய தேவை. புதிய ஆட்சியில் அமைச்சரவையில் சேர்வதாக இருந்தாலும் எந்த அமைச்சுக்கள், எத்தனை அமைச்சுக்கள், என்னவிதமான அதிகாரங்கள் என்பவற்றைப் பேரம் பேச எமக்குப் பலம் இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சுப் பதவி தொடர்பான சுமந்திரனின் இந்தப் பேச்சு அரசியல் மட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்தப் பேச்சுக்கு எதிராக தமிழ்த் தேசியக் கட்சிகள் கண்டனங்களையும் தெரிவித்திருந்தன.

இவ்வாறானதொரு நிலையில், புதிய அரசில் அமைச்சுப் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொள்ளுமா என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் கேட்டபோது, “புதிய அரசில் அமைச்சுப் பதவி பெறும் எண்ணம் எதுவுமே எம்மிடம் இல்லை. இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அப்படியான கொள்கையே இல்லை. தேர்தல் காலத்தில் அமைச்சுப் பதவி பற்றிப் பேச வேண்டிய அவசியமும் இல்லை” என்று உறுதியாகப் பதிலளித்தார்.

Related Articles

Latest Articles