நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல்வேறு தரப்பினரையும் ஒன்றிணைத்துத் தாம் அமைக்க உத்தேசித்துள்ள புதிய அரசை மேலும் தாமதமின்றி விரைந்து ஏற்படுத்தும்படி ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரியுள்ளனர்.
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதி அமைச்சருமான பஸில் ராஜபக்ச, பொதுச்செயலாளர் சாகர காரியவசம், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராய்ச்சி, நாமல் ராஜபக்ச, சஞ்சீவ எதிரிமன்ன ஆகியோர் கூட்டாக இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
சர்வகட்சி அரசோ, சர்வ கட்சி ஆட்சியோ, தேசிய அரசோ எது என்றாலும், மேலும் தாமதிக்காமல் விரைந்து அதனை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி ‘மொட்டுக்’ கட்சியினர் ஜனாதிபதியைக் கோரியுள்ளனர்.
ஜனாதிபதியின் அரசியல் நடவடிக்கைகளுக்கு ‘மொட்டு’க் கட்சி நிபந்தனையின்றி முழு ஒத்துழைப்பு தரும் என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.