திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் புதிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், அதன்மூலம் இந்திய கடற்படையினர் திருகோணமலை துறைமுகத்துக்குள் நுழையமுடியும் என வெளியிடப்பட்டுவரும் கருத்துகளை வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில் நிராகரித்துள்ளார்.
வலுசக்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு நிராகரிப்பு செய்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பில் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கு சில தரப்புகள் எதிர்ப்பை வெளியிட்டுவருகின்றன. 2003 ஆம் ஆண்டில் 99 எண்ணெய் குதங்களையும் இந்தியாவுக்கு வழங்கும்போது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடாதவர்கள், இவ்வாறு வழங்கப்பட்ட எண்ணெய் குதங்களில் 85 வீதமானவற்றை இலங்கையின் நிர்வாகத்தின்கீழ் எடுக்கும்போது மட்டும் எதிர்ப்பை வெளியிடுவது ஏன் என்ற சந்தேகம் எழுகின்றது.
அதேபோல 2ஆவது உலகப்போருக்கு பின்னர் சுமார் 100 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத – பழுதடைந்துவரும் நிலையில் உள்ள எண்ணெய் குதங்களை நாட்டு மக்களின் நன்மைக்காக பயன்படுத்த தயாராகும்போது எதிர்ப்பு வருவது ஏன்? இது தேசப்பற்றா அல்லது இந்தியாமீதான பற்றா?
அதேவேளை, புதிய உடன்படிக்கைமூலம் திருகோணமலை துறைமுகத்துக்குள் இந்திய கடற்படை வரமுடியும் என சிலர் கருத்துகளை பரப்பிவருகின்றனர். இதுபோலியான தகவலாகும் .99 எண்ணெய் குதங்களும் இந்தியாவின் நிர்வாகத்தின்கீழ் இருக்கும்போது, அதனை அடிப்படையாக வைத்து இந்திய கடற்படையினர் திருமலை துறைமுகம் வந்தனரா? இல்லை.
99 எண்ணெய் குதங்கள் இருக்கும்போது வராத இந்திய கடற்படை, 14 குதங்கள் இருக்கும்போது வருமா?” – என்றார்.
