நாடாளுமன்ற தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான புதிய யோசனையை ஏற்றுக்கொள்ள தயார் இல்லை என்று ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான அரவிந்தகுமார் தெரிவித்தார்.
தேர்தல் முறை மாற்றம் தொடர்பான கட்சி தலைவர்கள் கூட்டம் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நாடாளுமன்ற குழு அறையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவர் என்ற வகையில் கருத்து வெளியிட்ட அரவிந்தகுமார்,
” நீதி அமைச்சரால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தெளிவில்லை, பல்வேறு சந்தேகங்களை அது எழுப்புகின்றது. 15 லட்சம் இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கையில் வாழ்கின்றனர். விகிதாசார அடிப்படையில் 15 பிரதிநிதிகளாவது இருக்க வேண்டிய நிலையில் தற்போது 9 பிரதிநிதிகள் மாத்திரமே உள்ளனர். புதிய யோசனையாவது எமது பிரதிநிதித்துவத்தை மேலும் குறைத்துவிடுமோ என்ற சந்தேகம் உள்ளது. எந்த வடிவில் தேர்தல் முறை மாற்றம் வந்தாலும் எமது பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.” என்று திட்டவட்டமாக அறிவித்தார்.










