சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் புத்தாண்டு நிகழ்வுகளை நடத்தாவிட்டால் மீண்டுமொரு கொரோனா அலை உருவாகக்கூடிய அபாயம் உள்ளது. எனவே, அனைவரும் விழிப்பாகவே செயற்பட வேண்டும் – என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த இணையவழி ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது.
இதன்போது புத்தாண்டை கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகிவருகின்றனர். பொருட்களை வாங்குவதற்கு ஒன்றுகூடுகின்றனர். இதனால் கொரோனா வேகமாக பரவக்கூடிய அபாயம் உள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு அறிவிப்பு விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“மாவட்ட மட்டத்தில் நடைபெறும் அபிவிருத்திக்குழுக் கூட்டங்களில் பொலிஸ் அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட சுகாதார அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். இவர்களுக்கு பல அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக புத்தாண்டு நிகழ்வுகளின்போது முதலாவது மற்றும் இரண்டாவது தொடர்பாளர்களை இனங்காண்பது கடினமாக செயலாகும். எனவே, இக்காலப்பகுதியில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் சுகாதார வழிக்காட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றை உரிய வகையில் பின்பற்ற வேண்டும்.
அதேபோல் கொரோனா வைரஸ் பரவிவரும் சூழ்நிலையில், நிகழ்வுகளை உரிய வழிகாட்டல்கள், கட்டுப்படுத்தல்களுடன் நடத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரிகளும் உரிய வகையில் செயற்படவேண்டும்.
அவ்வாறு இல்லாது வழமைபோல் நிகழ்வுகள் நடத்தப்படுமானால் மீண்டுமொரு கொரோனா அலை உருவாகலாம். எனவே, அனைவரும் அவதானத்துடன் செயற்படவேண்டும்.” – என்றார்.