புனர்வாழ்வு அதிகாரி ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது!

சிறைச்சாலை திணைக்களத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு உத்தியோகத்தர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் மொனராகலையில் நேற்று (04) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொனராகலை சிறைச்சாலையில் புனர்வாழ்வு அதிகாரியாக கடமையாற்றும் சியம்பலாண்டுவ பகுதியை சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த அதிகாரி சில காலமாக மொனராகலை சிறைச்சாலைக்கு ஹெரோயின் மற்றும் ஐஸ் விநியோகம் செய்வதாகவும், அப்பகுதியிலுள்ள போதைப்பொருள் வியாபாரிகளுக்கு ஹெரோயின் மற்றும் ஐஸ் விநியோகிப்பதாகவும் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மொனராகலை வைத்தியசாலைக்கு முன்பாக மொனராகலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினர் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சோதனையின் போது அவரிடமிருந்த ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருவதுடன், சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ராமு தனராஜ்

Related Articles

Latest Articles