மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அம்மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவோம் – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது மாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றது. மாநாட்டில் தலைமையேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு உறுதியளித்தார்.
அதேவேளை, இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் சம உரிமை பெற்றவர்களாக வாழ வேண்டும். அதற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், மாகாணசபைகளுக்கான தேர்தலை எதிர்கொள்வதற்கு எமது கட்சி தயார். ஊழல் வழியில் பயணிக்கும் இந்த அரசுக்கு உரிய பதிலை வழங்குவதற்கு மக்களும் தயாராக வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச அறைகூவல் விடுத்தார்.
2025 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் ஆட்சியின்கீழ்தான் கட்சி மாநாடு நடைபெறும். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவோம் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.