பெருந்தோட்ட காணிகளை வெளியாருக்கு வழங்குவது மலையக மக்களின் இருப்பையும் எதிர்காலத்தையும் சிதைக்கும் முயற்சியா? என மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் விஜேசந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இன்று மலையக பெருந்தோட்ட பகுதிகளில் வெளியாருக்கு காணிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் தெரிவிக்கின்றார்கள்.
இந்த செய்றபாடானது மலையக மக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக மலையக தமிழ் மக்களின் இருப்பையும் அவர்களில் வாழ்வியல் வரலாற்றையும் கேள்விக்குறியாக்கும் செயற்பாடாகவே இதனை பார்க்க வேண்டியுள்ளது.
2013 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 37 ஏக்கர் காணிகள் தரிசு நிலங்களாக மலையக பகுதிகளில் இருப்பதாக அன்று பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த காணிகளை மலையகத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு பகிர்ந்தளித்து சுய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.இதற்காக 12500 இளைஞர் தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது.
இந்த திட்டத்திற்காக அன்றைய வரவு செலவு திட்டத்தில் 100 மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டது.ஆனால் அந்த திட்டம் நடைமுறைபடுத்தப்படவில்லை.இன்று அதற்கான ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த கொரோனா காரணமாக மலையகத்தில் கொழும்பில் வேலை செய்த சுமார் 50000 ஆயிரம் இளைஞர்கள் வேலையின்றி இருக்கின்றார்கள்.இளைஞர்களின் வேலைவாய்ப்பு இன்மை வீதம் 70.5 ஆக இருக்கின்றது.
இது மட்டுமல்லாமல் சுமார் 240580 பேர் தோட்டங்களுக்கு வெளியிலே அன்றாட கைக்கூலிகளாக வேலை செய்து கொண்டிருக்கின்றார்கள்.அதாவது நிரந்தரமற்ற தொழில்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.ஆகவே இந்த விடயங்களை கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த காணிகளை வெளியாருக்கு வழங்குவதை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.
ஏன் தோட்ட தொழிலாளர்களையும் மலையக இளைஞர் யுவதிகளையும் பாற்பண்ணை விவசாயிகளாக மாற்ற முடியாது.அதற்காக அவர்களுக்கு ஏன் சுய தொழிலுக்கான கடன் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க முடியாது.
அப்படி செய்ய முடியுமாக இருந்தால் அரசாங்கம் எதிர்பார்ப்பதை போல பால் உற்பத்தியும் அதிகரிக்கும் வேலை வாய்ப்பு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு கிடைக்கும்.அப்படி செய்கின்ற பொழுது பெருந்தோட்டங்களின் வருமானம் அதிகரிக்கும் அதற்கான அனுபவமும் அவர்களிடம் இருக்கின்றது.
இன்று 1000 ரூபா சம்பள உயர்வின் பின்பு தொழிலாளர்களின் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளது.அவர்களுடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.அவர்களை கொத்தடிமைகளை போல நடாத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பல அரசாங்கத்திற்கு சொந்தமான அரச பெருந்தோட்ட காணிகளை வெளியாருக்கு வழங்கியதன் மூலமாக இன்று அந்த பகுதியில் இருக்கின்ற மக்கள் பிச்சை எடுக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்;கள்.அந்த நிலைமையை ஏiனைய பகுதிகளில் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு செயற்படுகின்றதா?என்ற சந்தேகமும் எழுகின்றது.
எனவே இந்த காணிகளை வெளியாருக்கு தாரை வார்ப்பது என்பது அரசாங்கத்தின் ஒரு திட்டமிட்ட செயலாகும்.எனவே இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் உடனடியாக மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஒரு பேராசிரியர் என்ற வகையில் முன்வைக்க விரும்புகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.