‘பெருந்தோட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்தால் குறைவு’

தனியாருக்குச் சொந்தமான 23 பெருந்தோட்டக் கம்பனிகளில் தொழில்புரியும் தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கை, கடந்த ஒன்பது வருடங்களில், 68 ஆயிரத்தால் குறைந்திருப்பது, தகவலறியும் உரிமைச் சட்டத்தினூடாகத் தெரியவந்துள்ளது.

தேயிலை, தென்னை, இறப்பர் ஆகிய பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையில், தனியாருக்குச் சொந்தமான 23 பெருந்தோட்டக்கம்பனிகள் ஈடுபடுகின்றன.

இந்தக் கம்பனிகளில்பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை, கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் காணப்பட்ட பெருந்தோட்டக் கைத்தொழில், ஏற்றுமதி கமத்தொழில் அமைச்சிடம், 2016 ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (RTI) தகவல்கள் கோரப்பட்டிருந்தன.

தமிழ் மொழியில் தகவல்கள் கோரப்பட்டிருந்த போதிலும், ஆங்கில மொழியில் வழங்கப்பட்டிருக்கும் பதில்களிலேயே, பெருந்தோட்டத் துறையில், கடந்த ஒன்பது வருடங்களில், சுமார் 68 ஆயிரம் தொ ழிலாள ர்கள் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

அத்துடன், சிலாபம், குருநாகல் ஆகிய இரு பெருந்தோட்டக்கம்பனிகள், தேயிலை உற்பத்தியில் ஈடுபடவில்லை என்றும் அக்கரபத்தன, சிலாபம் ஆகிய இரு பெருந்தோட்டக் கம்பனிகள், இறப்பர் உற்பத்தியில் ஈடுபடவில்லை என்றும், RTI பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கரபத்தன, மத்துரட்ட, மடுல்சீம ஆகிய மூன்று பெருந்தோட்டக் கம்பனிகளும், தென்னை பயிர்ச்செய்கையில் ஈடுபடவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, 23 பெருந்தோட்டக் கம்பனிகளிலும், கடந்த 2009ஆம் ஆண்டில் இரண்டு இலட்சத்து 439 தொழிலாளர்கள் பணிபுரிந்துள்ளதோடு, 2018ஆம் ஆண்டு வரையில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், 2018 ஆம் ஆண்டில், வெறும் ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 445 தொழிலாளர்களே பணிபுரிகிறார்கள்.

இதனடிப்படையில், கடந்த ஒன்பது வருடங்களில், சுமார் 68 ஆயிரம் தொழிலாளர்கள் குறைந்திருக்கிறார்கள் என்பது, RTI பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பா.நிரோஷ்

நன்றி தமிழ்மிரர்

Related Articles

Latest Articles