இரத்தினபுரி மாவட்டத்தில் அதி கூடுதலான விருப்பு வாக்குகளை வழங்கி என்னை மதித்த மக்களுக்கு எனது சேவை காலத்தில் அர்ப்பணித்து பணியாற்றுவேன். அத்துடன், மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் சம்பள உயர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.
இரத்தினபுரியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது.
” நீங்கள் வழங்கியுள்ள அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி இந்நாட்டை உலகின் தலைசிறந்த நாடாக மாற்றும் வரை எதிர்க்கட்சிகளின் தலைவர்களான சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு மீண்டும் இந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தை நினைத்துப் பார்க்கவும் இடமளிக்கமாட்டோம்.
தேர்தல் காலங்களில் பல்வேறு விநோதமான சில உரைகளை நாங்கள் செவிமடுத்தோம். ஒரு சில கொரோனா நோயாளிகளுக்காக நாட்டு மக்களுக்கு ஊரடங்குச் சட்டம் போட்டு கஷ்டப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என ஐக்கிய மக்கள் க ட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மேடைகளில் பிரசாரம் செய்தார்.
தேர்தல் மேடைகளில் கொரோனா நோயாளர்கள் இந்த மருந்தை தான் அருந்த வேண்டும் எனப் பிரசாரம் செய்தார்.இன்னொரு சந்தர்ப்பத்தில் அந்த மருந்தை அருந்த வேண்டாம் எனக்கூறி இன்னொரு மருந்து வகையை அருந்துமாறு கூறினார்.இந்த வகையான நகைப்புக்கிடமான விடயங்களில் பொது மேடைகளில் பேசுவோரால் எவ்வாறு நாட்டை ஆள முடியும்.
பாராளுமன்ற தேர்தல்களிலும் நீங்கள் இம்மாவட்டத்தில் என்னை முதன்மை விருப்பு வாக்குகளால் வெற்றி பெறச்செய்து கெளரவம் படுத்தினீர்கள்.எனவே உங்கள் சேவைக்காக நான் என்னை அர்ப்பணித்து சேவையாற்றுவேன்.
இரத்தினபுரி மாவட்டத்திலும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு நியாயமான சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கான அரசியல் தலைமைத்துவத்தை அரசாங்கம் வழங்கும்.” – என்றார்.