‘பெருந்தோட்ட பகுதி மக்களையும் ஜனாதிபதி சந்திக்க வேண்டும்’

ஜனாதிபதியின் ‘கம சமக பிலிசந்தர’ என்ற கிராமத்துடனான கலந்துரையாடல் வேலைத்திட்டத்தினை பெருந்தோட்டப் பகுதிகளுக்கும் ‘ வத்து சமக பிலிசந்தர’ என்ற வகையில் கொண்டு செல்லப்படல் வேண்டுமென்ற, எனது கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டிருப்பதாக, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் வழங்கிய நேர்காணலொன்றின் போது தெரிவித்தார்.

இந் நேர்காணல் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரின் பதுளைப் பணியகத்தில் 18.03.2021ல் இடம்பெற்ற போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், ‘ ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, நாட்டின் பின் தங்கிய கிராமங்களுக்கு சென்று, அக்கிராம மக்களுடன் நேரடியாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றார். மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து, ஜனாதிபதி அம்மக்கள் ஊடாகவே அறிந்து கொள்கின்றார். அத்துடன், அதிமுக்கிய பிரச்சினைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்தும் வருகின்றார். இச் செயல்திட்டத்தினை, கிராம மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இதனால் பெரும் நன்மைகள் கிராமங்களுக்கு கிடைக்கின்றன.

ஆனால், இது போன்றதோர் செயல்திட்டம் பெருந்தோட்டப்பகுதிகளுக்கு கிடைப்பதில்லை. நாட்டின் பின்தங்கிய கிராமங்களை விட, பெருந்தோட்டப்பகுதிகள் அனைத்து துறைகளிலும், பெரும் பின்னடைவுகளை எதிர்நோக்கியிருக்கின்றன. மேலும், பெருந்தோட்டத்துறை மக்கள் நாளாந்தம் பெரும் அவலங்களையும், பாதிப்புக்களையும் எதிர்கொண்ட நிலையிலேயே, இருந்து வருகின்றனர்.

அந்நிலையில், ஜனாதிபதி பெருந்தோட்டப்பகுதிகளுக்கு சென்று அம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை, அம்மக்கள் ஊடாகவே அறிந்து, அதற்குரிய தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முடியும். அத்துடன், பெருந்தோட்ட மக்களின் உண்மை நிலையினையும், ஜனாதிபதியினால் நேரடியாக கண்டு கொள்ளக்கூடிய வாய்ப்புக்களும் கிட்டும்.

ஆகவே ‘ வத்து சமக பிலிசந்தர’ என்ற வகையில் தோட்டங்களுடான கலந்துரையாடல் வேலைத்திட்டத்தினை பெருந்தோட்ட பகுதிகளிலும் கிராம புறங்களைப் போன்று முன்னெடுக்கப்படல் வேண்டும். ஜனாதிபதி நேரடியாக எம்மக்களைச் சந்தித்து எம் மக்களின் குறைகளை தேவைகளை விருப்புக்களை அறிய வேண்டும்.

இது போன்ற நிலை ஏற்படும் பட்சத்தில், பெருந்தோட்ட நிறுவனத்தினரும், அரச அதிகாரிகளும் தோட்ட மக்கள் குறித்தும் கூடிய கவனம் செழுத்தி, அம்மக்களின் தேவைகள், குறைபாடுகள் ஆகியவற்றை நிவர்த்தி செய்ய முன்வருவர். நாட்டின் தலைவர் தம்மை நாடி வந்து தேவைகள், குறைபாடுகளை கேட்டறியும் போது, அம்மக்களுக்கும் பெருமிதமும் ஜனாதிபதி மீது பற்றும் ஏற்படும்.

எனது இக்கோரிக்கையை ஜனாதிபதி ஏற்று, அதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மூடப்பட்டிருக்கும் தோட்டத் தொழிற்சாலைகள் பதுளை மாவட்டத்தின் பெருந்தோட்டப்பகுதிகளில் சுமார் 25 தேயிலைத் தொழிற்சாலைகள் கைவிடப்பட்டு மூடப்பட்டுள்ளன. இத் தொழிற்சாலைகளை கைத்தொழில் பேட்டைகளாக மாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும். இத் தொழில் பேட்டைகளில், அப் பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளை வேலைக்கமர்த்தினால் அதி சிறந்த பயன்களைப் பெறக் கூடியதாக இருக்கும்.

இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைப்பதுடன், நாட்டின் வறுமானமும் அதிகரிக்கவே செய்யும். தோட்டப்பகுதிகளில் தொழில் வாய்ப்பில்லாதலால், அங்குள்ள இளைஞர், யுவதிகள் கொழும்பு போன்ற நகரங்களை நாடிச் செல்ல வேண்டிய நிலையும் ஏற்படாது. தோட்டங்களிலுள்ள தொழில் பேட்டைகளிலேயே அவர்களால் கௌரவமான முறையில் தொழில் செய்யக் கூடிய வாய்ப்புக்கள் ஏற்படும்.

இது விடயத்தை ஜனாதிபதியிடம் தெரிவித்ததும், அதற்கான வரைபுகளை தன்னிடம் சமர்ப்பிக்கும்படியும், அது குறித்து கூடிய கவனம் செழுத்துவதாகவும் கூறினார்.
மூடப்பட்டு, கைவிடப்பட்டிருக்கும் தோட்ட உத்தியோகத்தர்களின் வாசஸ்தலங்கள்
தற்போதைய நிலையில், தோட்டங்களில் தோட்ட உத்தியோகத்தர்களது குறைப்பினால், அவர்களுடைய வாசஸ்தலங்கள், கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. இவ்வாசஸ்தலங்கள் கவனிப்பாரற்ற நிலையில் இருப்பதால், காலப்போக்கில் இவ் வாசஸ்தலங்களின் கதவுகள், யன்னல்கள், கூரைகள் போன்றவைகள் காணாமல் போய்விடுகின்றன.

தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு குடியிறுப்புக்கள் இல்லாது, பல குடும்பங்கள் ஒரே குடியிருப்பில் வாழக்கூடிய அவலங்கள் நீடிக்கின்ற இந்நிலையில், மேற்குறிப்பிட்ட வாசஸ்தலங்கள் கவனிப்பாரற்ற வகையில் காணப்படுகின்றன. இவற்றினை தொழிலாளர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டமொன்றும் மேற்கொள்ளப்படல் வேண்டும். ஜனாதிபதி இவ்விடயம் குறித்து கவனம் எடுக்குமாறு, தமது அதிகாரிகளைப் பணித்தார்.

பெருந்தோட்ட லயக் குடியிறுப்புக்கள் சீர்திருத்தப்படலும் புதிய வீடமைப்புத்திட்டங்களை ஏற்படுத்தலும்

பெருந்தோட்டங்களில் 150 – 200 வருடங்கள் பழமை வாய்ந்த லயக் குடியிறுப்புக்களும் இருந்து வருகின்றன. இக்குடியிறுப்புக்களை சீரமைப்பு செய்தல் வேண்டும். புதிய வீடமைப்புத்திட்டங்களை அரசு முன்னெடுக்க வேண்டுமென ஜனாதிபதியிடம் கூறினேன். அதற்கு ஜனாதிபதி, பெருந்தோட்டப்பகுதிகளுக்கு இந்திய வீடமைப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்றார்.

அதற்கு நான், இந்திய அரசினால் முதல்கட்டமாக நாலாயிரம் வீடுகளும், 2ம் கட்டமாக பத்தாயிரம் வீடுகளுமாக 14 ஆயிரம் வீடுகளே உள்ளன. ஆனால், பெருந்தோட்டப்பகுதிகளுக்கு இரண்டரை இலட்சம் பேருக்கு தனி வீடுகள் தேவைப்படுகின்ற நிலையில், 14 ஆயிரம் வீடுகளே, இந்திய அரசு வழங்குகின்றன. இவ்வீடமைப்புத்திட்டத்தின் மூலம், எமது மக்களின் வீட்டுத் தேவைகள் நிறைவடையாது. ஆகையினால், எமது அரசு மூலம் வீடமைப்புத்திட்டங்களை துரிதப்படுத்த வேண்டும். இதனை ஜனாதிபதி செவிமடுத்ததுடன், இது குறித்தும் கவனம் செழுத்துவதாகக் கூறினார்.

தோட்டங்களிலுள்ள மரங்கள் வெட்டப்படல்

பெருந்தோட்டங்களிலுள்ள மரங்கள் தோட்ட முகாமைத்துவங்களினால், வெட்டி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதன் மூலம் கிடைக்கும் பலகோடி ரூபா கொண்ட பெரும் வறுமானம் குறித்து, வெளியிடப்படுவதில்லை. அவ் வறுமானம் தோட்ட முகாமைத்துவங்களினால் சுரண்டப்படுகின்றன. அது போன்று, தோட்ட சொத்துக்களும் சூறையாடப்படுகின்றன.

பல கோடி ரூபா பெறுமதியான இம் மரங்களை தற்போதைய கம்பனிக்காரர்களோ, முகாமைத்துவத்தினரோ நாட்டியதில்லை. இவர்களுக்கு இம் மரங்களுக்கு உரிமைக்கோரவோ அம்மரங்களை வெட்டி விற்பனை செய்யவோ எவ்வகையிலும் அருகதையில்லை.

பல தசாப்தங்களுக்கு முன் இம் மரங்கள் நாட்டப்பட்டனவாகும். இம் மரங்களுக்கு உரிமை கோருவதற்கு தொழிலாளர்களுக்கு மட்டுமே முடியும். ஆனாலும் பெருந்தோட்ட காணிகள் அதிலுள்ள வளங்கள் அரசுக்கே சொந்தமாகும். தற்போதைய கம்பனிகாரர்கள் தோட்டங்களை பராமரிக்கின்ற குத்தகைகாரர்கள் மட்டுமேயாகும். தோட்டங்களில் எந்தவொரு சொத்தையும் தோட்ட நிருவாகத்தினாலும் சூறையாட முடியாது.

அத்துடன் அக் குத்தகை உரிமையை வைத்து தோட்ட முகாமைத்துவத்தினர் தோட்ட மரங்களை வெட்டி விற்பனை செய்து பெரும் வறுமானம் பெறுகின்றன.
இவ்வகையில், கிடைக்கும் வறுமானத்தில் குறைந்த பட்சம் 50மூ வீத வறுமானமாவது, தோட்டத் தொழிலாளர்களின் சேம நலன்களுக்கு பயன்படுத்தும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படல் வேண்டும். இது குறித்தும், ஜனாதிபதி கூடிய கவனம செழுத்துவதாகக் கூறினார்.

பெருந்தோட்டங்களில் 7500 மலசலகூடங்கள் தேவையென்று கணிப்பீடு

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் 7500 மலசலகூடங்கள் தேவையென்று ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த அரசின் காலத்தில் 500 மலசல கூடங்கள் நிருமாணிக்கப்பட்டுள்ளன. ஆகவே, தாங்கள் இது விடயத்தில் கூடிய கவனம் செழுத்தி, தேசிய வேலைத்திட்டமொன்றின் கீழ் தேவைப்படும். மலசலகூடங்களை நிருமாணிக்கும் செயற்பாடுகளை ஆரம்பிக்கப்படல் வேண்டும். இது விடயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

பெருந்தோட்டங்களில் ஏற்பட்டு வரும் பிணக்குகள், முரண்பாடுகள் குறித்து பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்படும் போது, அதன் விசாரணைகளில் பாரபட்சம், பாகுபாடுகள் காட்டப்படல்.

பெருந்தோட்டங்களில் தோட்ட முகாமைத்துவங்களுக்கும், தொழிலாளர்களுக்குமிடையே ஏற்பட்டு வரும் பிணக்குகள், முரண்பாடுகள் குறித்து பொலிஸ் நிலையங்களில் செய்யப்படும் முறைப்பாடுகள் விசாரணைகள் செய்யப்படும் போது, தொழிலாளர்களுக்கு திருப்தியின்மை ஏற்படுகின்ற நிலையினைக் காணமுடிகின்றது.

அத்துடன், தொழிலாளர்கள் தோட்ட நிருவாகங்களுக்கெதிராக கொண்டு செல்லப்படும் முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. தோட்ட நிருவாகங்கள், தொழிலாளர்களுக்கெதிராக செய்யப்படும் முறைப்பாடுகள் உடன் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தொழிலாளர்கள் பாதிப்பு அடையும் வகையில், நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அப்படியே இரு தரப்பு விசாரணைகள் ஏற்படும் பட்சத்திலும், தொழிலாளர்கள் பாதிப்படையும் வகையிலேயே, நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தொழிலாளர்கள் என்றதும் பாகுபாடுகள், பாரபட்சங்கள் காட்டப்பட்டு வருவதும் வழமையாகியுள்ளது. இதனை ஜனாதிபதி செவிமடுத்ததுடன் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

பெருந்தோட்டப் பாதைகள் அமைப்பு

பெருந்தோட்டப் பாதைகள் அமைப்பு தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பதிலாக ‘மகநெகும’ அமைப்பினை சக்திமயப்படுத்தினால், பாதை அபிவிருத்திகள் துரிதமாக மேற்கொள்ளப்படுமென்பது பலரது கருத்தாகும். ஆகவே, ‘மகநெகும’ அமைப்பின் ஊடாகவே, பாதை அபிவிருத்திகள் இடம்பெறுவது உசிதம் என்று கருத வேண்டியுள்ளது. இதனையும் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுடன், ஜனாதிபதியின் மாளிகையில் 17.03.2021 இச்சந்திப்பு இடம்பெற்றது. இவ்வேளையிலேயே, மேற்கண்ட எனது கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் முன்வைத்தேன். தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் தோட்ட இளைஞர், யுவதிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், தோட்ட இளைஞர் யுவதிகளுக்கு அரச தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தல் குறித்தும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினேன்.

எனது கோரிக்கைகளை ஜனாதிபதி உன்னிப்பாக செவிமடுத்ததுடன், அவற்றினை நிறைவேற்ற அவரது உரிய செயலாளர்களிடம் வலியுறுத்திக் கூறினார். அவ்வேளையில் ஜனாதிபதியுடன், அவரது செயலாளர் பி.பி. ஜயசுந்தர, ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகிஸ்வர பண்டார, ஜனாதிபதியின் இணைப்புச்செயலாளர் இசுறு ஹேரத் மற்றும் அமைச்சுகளின் செயலாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

நேர்காணல் – எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles