மலையக பெருந்தோட்ட மக்களுக்கும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்குமாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாட்டில் இன்று பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இதற்கு கொரோனா வைரஸ் தொற்று மட்டும் காரணம் அல்ல. அரசின் தவறான கொள்கைகளே இந்நிலைமைக்கான பிரதான காரணமாகும்.
தற்போதைய சூழ்நிலையில் பெருந்தோட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். முறையாக உண்பதற்குகூட வசதி இல்லை. அரச ஊழியர்களுக்கு 5 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சலுகை விலையில் கோதுமை மா வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படவில்லை.
ஆயிரம் ரூபா சம்பளம்கூட கிடைப்பதில்லை. அம்மக்களுக்கு பாகுபாடு காட்டப்படுகின்றது. எனவே, பெருந்தோட்ட மக்களுக்கும் 5 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும்.
நல்லாட்சியின்போது நுவரெலியா மாவட்டத்தில் மேலதிக பிரதேச செயலகங்களை அமைப்பதற்கு வர்த்தமானியில் அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது. அந்த அறிவித்தல் தற்போது நடைமுறைப்படுத்தப்படவில்லை. உப செயலகம் அமைக்கப்பட்டு அது மூடப்பட்டுள்ளது.” – என்றார்.
