200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு, பேராதனை தேசிய தாவரவியற் பூங்காவில் தாவரவியல் அருங்காட்சியகம் ஒன்று நிறுவுவதற்கு தேசிய தாவரவியற் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஷேலோமி கிறிஷ்ணராஜா தெரிவித்தார்.
பேராதனைப தேசிய தாவரவியற் பூங்கா அமைக்கப்பட்டு 200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு பல்வேறு அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அது தொடர்பாக கண்டியில் வைத்து கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்
பேராதனைப் பூங்கா வளவில் அமைக்கப்பட உள்ள மேற்படி அருங்காட்சியகம் மூலம் இந்நாட்டின் தாவரங்கள் பற்றிய விஞ்ஞான ரீதியான தகவல்கள் மற்றும் சர்வதேச தாவரவியல் தொடர்பான தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
ஆங்கிலேயரான அலெக்சாண்டர் மூன் என்பவரால் 1821 ம் ஆண்டு அமைக்கப்பட்ட ப் இப்பூங்காவிற்கு தற்போது 200 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. மேற்படி பூங்கா பற்றிய முழு விபரம் அடங்கிய நூல் ஒன்றும் வெளியிடப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஞாபகார்த்த முத்திரை மற்றும் தபால் தளை என்பனவும் வெளியிடப்பட உள்ளன.
மகாவலி ஆற்றுக்கரையில் 147 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இப்பூங்காவில் இலங்கைக்கு மட்டும் உரித்தான அனைத்து தாவரங்களும் நடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதே நேரம் உலகில் அருமையான தாவரங்கள் சிலவும் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.










