பொகவந்தலாவ கெம்பியன் கீழ்பிரிவு தோட்டத்தில் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந்த வயோதிப பெண்ணொருவர் இன்று (28.11.2020) காலை திடீரென உயிரிழந்துள்ளார்.
4 பிள்ளைகளின் தாயான 69 வயதுடைய கந்தையா தெய்வானை என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணின் மகளும், பேரப்பிள்ளையும் கொழும்பு, பத்தரமுல்ல பகுதியில் இருந்து கடந்த 16 ஆம் திகதியே கெம்பியன் கீழ்பிரிவு தோட்டத்திலுள்ள வீட்டுக்கு வந்துள்ளனர்.
இதனையடுத்து கொழும்பில் இருந்து வந்த இருவரும், அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் நால்வருமாக மொத்தம் 6 பேரை சுய தனிமைக்கு உட்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இந்நிலையிலேயே அவர் இன்று காலை திடீரென உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்கான கிளங்கள் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட நால்வரும், சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
