பொகவந்தலாவை நகரிலுள்ள ஜுவல்லரியொன்றில் போலி சங்கிலியை வைத்துவிட்டு, தங்க சங்கிலியை கொள்ளையடித்துச்சென்ற மூவரை பொகவந்தலாவ பொலிஸார் மடக்கிப்பிடித்துள்ளனர்.
நீர்க்கொழும்பு மற்றும் திவுலபிட்டிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தப்பிச்சென்ற காரும், அவர்கள் வசமிருந்த சில போலி நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
பொகவந்தலாவை நகரிலுள்ள ஜுவல்லரியொன்றுக்கு இன்று (17) சென்ற நபரொருவர், தங்க சங்கிலி வாங்கவேண்டும் என கூறி, உள்ளவற்றை காட்டுமாறு கோரியுள்ளார்.
இதன்படி கடை உரிமையாளர்களும் தங்கசங்கிலிகளை காட்டியுள்ளனர். அவற்றில் ஒன்றை தெரிவுசெய்துவிட்டு, காரில் உள்ளவர்களுக்கு காண்பித்துவிட்டு வருகின்றேன் என கூறிய அவர், காரில் ஏறிய பின்னர் தப்பிச்சென்றுள்ளார். அத்துடன், குறித்த தங்க கடையில் போலியான சங்கிலியொன்றையும் விட்டுச்சென்றுள்ளார்.
இது தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கொள்ளையர்களை துரத்திச்சென்ற பொலிஸார், ஹட்டன் பலாங்கொடை பிரதான வீதியின் பெற்றோசோ சோதனை சாவடியில் வைத்து அவர்களை மடக்கிபிடித்தனர்.
காருக்குள் மூவர் இருந்துள்ளனர். அத்துடன், போலி நகைகளும், கொள்ளையடிக்கப்பட்ட சங்கிலியும் மீட்கப்பட்டுள்ளது. விசாரணைகள் தொடர்கின்றன. கைதானவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
திட்டமிட்ட அடிப்படையில் இக்குழுவினர் இவ்வாறு கொள்ளையடிப்பில் ஈடுபட்டுவந்துள்ளனரா என்பது தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொகவந்தலாவை நிருபர் – எஸ். சதீஸ்