ஒருபுறம் கலை நிகழ்ச்சிகளை காண்பித்தவாறு மறுபுறம் ஆட்சியாளர்கள் திருகோணமலையின் சொத்துக்களை விற்பனை செய்கின்றார்கள் – என்று தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் மற்றும் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.
வற் வரி அதிகரிப்புக்கு எதிராக மூதூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ ஒருபுறம் பொங்கல் பண்டிகை, கலை நிகழ்ச்சிகள் என்று வெளி உலகுக்கு காண்பித்துக் கொண்டு மறுபுறத்தில் திருகோணமலையின் வளங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தில் இறங்கியிருக்கிறது.
இலங்கையில் பெறுமதிமிக்க வளங்களை கொண்ட மாவட்டமாக திருகோணமலை மாவட்டம் இருக்கிறது. ஆனால், இங்குள்ள சொத்துக்கள் குறைந்த விலைக்கு அந்நியர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதை திசைதிருப்பும் முகமாக பல்வேறு கொண்டாட்ட வைபவங்கள் ஒழுங்கு செய்யப்படுகின்றன. ஆக, இவ்வாறு எமது வளங்களை அந்நியருக்கு தாரைவார்ப்பதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.
