பொதுத்தேர்தல் 2020 – பதுளை மாவட்டம் தொடர்பான பார்வை

பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்கு பதுளை மாவட்டத்திலிருந்து ஆறு இலட்சத்து அறுபத்தெட்டாயிரத்து நூற்று அறுபத்தாறு (6,68,166) பேர் தகுதிபெற்றுள்ளனர்.

இவ் வாக்காளர்கள் மகியங்கனை, வியலுவை, பசறை, பதுளை, ஹாலி-எலை, ஊவா – பரணகமை, வெலிமடை, பண்டாரவளை, ஹப்புத்தளை ஆகிய ஒன்பது தேர்தல் தொகுதிகளைச் சார்ந்தவர்களாவர்.

மகியங்கனை – 105,150 பேர், வியலுவை – 54,995 பேர், பசறை – 67,196 பேர், பதுளை – 59,353 பேர், ஹாலி-எலை – 74,785 பேர், ஊவா – பரனகமை – 66,278 பேர், வெலிமடை – 80,482 பேர், பண்டாரவளை – 89861 பேர், ஹப்புத்தளை – 70066 பேர் என்ற வகையில் 6, 68, 166 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்ற மொத்த வாக்காளர்களாவர்.

இவ் வாக்களர்களில் ஒரு இலட்சத்து இருபத்தாயிரம் பேர் தமிழ் வாக்காளர்களாகவும், நாற்பத்தொன்பதாயிரத்து அறுநூறு பேர் முஸ்லீம் வாக்காளர்களாகவும், நான்கு இலட்சத்து தொன்னூற்று இரண்டாயிரத்து ஐநூற்று அறுபத்தாறு பேர் சிங்கள வாக்காளர்களாகவும் இருந்து வருகின்றனர்.

பெரும்பான்மையின வாக்குகள் 492, 566 பேர்
தமிழ் வாக்குகள் 126, 000 பேர்
முஸ்லீம் வாக்குகள் 49,600 பேர்
மொத்த வாக்குகள் 668, 166 பேர்

இவர்களில் 15 தமிழ்ப் பெண்கள் உள்ளிட்ட 60 தமிழ் வேட்பாளர்களாகவும், ஒரு முஸ்லீம் பெண் வேட்பாளர் உள்ளிட்ட 17 முஸ்லீம் வேட்பாளர்களும், மூன்று பௌத்த துறவிகள் உள்ளிட்டு 29 சிங்களப் பெண்கள் உட்பட இருநூற்று பதினொரு (211) பேர் சிங்கள இன வேட்பாளர்களாகவும் இருந்து வருகின்றனர்.

தமிழ் வேட்பாளர்கள் 60 பேர்
முஸ்லிம் வேட்பாளர்கள் 17 பேர்
சிங்கள வேட்பாளர்கள் 211 பேர்
மொத்த வேட்பாளர்கள் 288 பேர்

1. ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி, 3. ஐக்கிய தேசியக் கட்சி, 4. தேசிய மக்கள் கட்சி, 5. எங்கள் மக்கள் சக்தி (அபே ஜனபல கட்சி), 6. ஐக்கிய இடதுசாரி முன்னணி, 7 முன்னிலை சோசலிசக் கட்சி, 8. லிபரல் கட்சி, 9. ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி, 10. இலங்கை சோசலிசக் கட்சி, 11. சிங்கள தீப தேசிய முன்னணி, 12. ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி ஆகிய பன்னிரு அரசியல் கட்சிகளும், சுயேச்சை 1,2,3,4,5,6,7,8,9,10,11,12 என்ற சுயேச்சைக் குழுக்களும் பதுளை மாவட்டத்தில் தேர்தல் களம் இறங்கியுள்ளன.

இவ் அரசியல் கட்சிகளில் 144 வேட்பாளர்களும், 12 சுயேச்சைக் குழுக்களில் 144 வேட்பாளர்களுமாக 288 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.பதுளை மாவட்டத்தில் ஏற்கனவே இருந்த ஆசனங்களை விட மேலுமொரு ஆசனம் அதிகரிக்கப்பட்டு ஒன்பது ஆசனங்களாகின்றன.

அத்துடன், பதுளை மாவட்டத்தின் ஒன்பது தேர்தல் தொகுதிகளிலும் கடந்த தேர்தலில் வாக்களித்தோரை விட மேலும் பன்னீராயிரம் வாக்காளர்கள் அதிகரிக்கப்பட்டிருப்பமையும் விசேடமாக குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

பதுளை மாவட்டத்திலிருந்து ஒன்பது பேரைத் தெரிவு செய்து பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்கு, இருநூற்று என்பத்தெட்டுப் பேர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் இதுவரை பாரிய தேர்தல் குற்றச் செயல்களோ, வன்முறைச் சம்பவங்களோ இடம்பெறாத போதிலும், சிறுசிறு குற்றச் செயல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் சுகாதார வழிமுறைகள் பூரணமாக பின்பற்றப்படும் வகையில் தேர்தலை மிகவும் அமைதியான முறையில் நடாத்தவும் அனைத்து செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும், பதுளை மாவட்ட தேர்தல் தெரிவு அத்தாட்சி அலுவலர் தமயந்தி பரணகமை தெரிவித்தார்.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles