இங்கிலாந்து பெர்மிங்ஹாம் நகரில் இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற 73 நாடுகளில் அதிக வீரர்கள் மற்றும் அதிகாரிகள் காணாமல் போன நாடாக இலங்கை பதிவாகியுள்ளது.
இவ்வாறு பெர்மிங்ஹாமில் காணாமல்போன இலங்கை வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற இலங்கை உட்பட ஐந்து நாடுகளின் 17 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் காணாமல்போயிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இறுதியாக கடந்த ஓகஸ்ட் 10 ஆம் திகதி நாடு திரும்புவதற்கு தயாராக இருந்த இலங்கை குழாத்தின் பணிக் குழுவைச் சேர்ந்த உதவியாளர் ஒருவர் காணாமல்போயுள்ளார்.
அவர் இலங்கை மல்யுத்த சம்மேளனத்தின் செயலாளராகவும் செயற்பட்டவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. விளையாட்டு விழா முடியும்வரை இலங்கை குழாத்தின் பணிகளை செய்து வந்த அவர் பின்னர் காணாமல்போயிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
கெமரூன், பொட்ஸ்வானா மற்றும் கானா ஆகிய நாடுகளில் மூன்று வீரர்கள் மற்றும் பாகிஸ்தானின் இரு வீரர்கள் இந்த விளையாட்டு விழாவில் பங்கேற்றிருந்த வேளை காணாமல்போயுள்ளனர்.
இதில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் இலங்கையில் இருந்து வந்த வீரர்கள் காணாமல்போயிருப்பது சர்வதேச ஊடகத்தின் அவதானத்தை பெற்றுள்ளது.
இம்முறை விளையாட்டு விழாவில் இலங்கை சார்பில் 110 வீர, வீராங்கனைகள் மற்றும் 51 அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். இலங்கை மொத்தம் 4 பதக்கங்களை வென்றது.
ஜூடோ மற்றும் மல்யுத்த வீராங்கனைகள், இரு மல்யுத்த வீரர்கள், மூன்று குத்துச்சண்டை வீரர்கள், இரு கரப்பந்தாட்ட வீரர்கள், ஜூடோ அணியின் முகாமையாளர் மற்றும் ஒட்டுமொத்த குழாத்தின் உத்தியோகபூர் படப்பிடிப்பாளர் ஆகியோர் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின்போதும் அவ்வப்போது காணாமல்போயினர்.
எவ்வாறாயினும் இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க அனுமதி பெற்ற இலங்கையர் உட்பட வெளிநாட்டினருக்கு இங்கிலாந்தில் தங்கி இருப்பதற்கு 180 நாள் விசா அனுமதி உள்ளது.
காணாமல்போனோர் பற்றிய பல விபரங்கள் கிடைத்தபோதும் செல்லுபடியான விசா காலம் முடியும் வரை சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க முடியாது என்று பெர்மிங்ஹாம் பொலிஸார் மற்றும் இங்கிலாந்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.










