” எனக்கு அரச மாளிகையும், சிறைச்சாலையும் ஒன்றுதான். எனவே, சிறைச்சாலைக்கு செல்வதற்கு அஞ்சமாட்டேன். தவறுகள் இருந்தால் விசாரணை நடத்துங்கள்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
பதுளையில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” நாம் வேலைகளை செய்து ஆட்சிக்கு வந்தவர்கள், மாறாக பொய்யுரைத்து அரியணையேறவில்லை. ஆனால் பொய்களால் எம்மை வீழ்த்தினார்கள். மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு நாம் பொய்யுரைக்கவில்லை. அரசியல் பழிவாங்கல்களிலும் ஈடுபடவில்லை. கொள்கை அடிப்படையிலான அரசியலையே முன்னெடுத்துவருகின்றோம்.
2018 ஆம் ஆண்டு நாம் உள்ளுராட்சிசபைத் தேர்தலில்வென்றபோது மத்திய அரசாங்கத்தின் பலம் எம்வசம் இருக்கவில்லை. ஆனால் மத்தியில் அதிகாரம் இல்லை என நாம் திணறவில்லை. சேவைகளை உரிய வகையில் முன்னெடுத்தோம்.
அதேவேளை, ஜனாதிபதி தற்போது பொலிஸ் ஊடகப்பேச்சாளர்போல் செயல்படுகின்றார்.
எனக்கு சிறைக்கு செல்வது பிரச்சினை இல்லை. சிறைச்சாலையும் ஒன்றுதான், அரசாங்க மாளிகையும் ஒன்றுதான். எம்மீது சேறுபூசுவதால் மக்களின் பிரச்சினை தீர்ந்துவிடப்போவதில்லை. பொருளாதாரமும் மேம்படப்போவதில்லை.” – என்றார்.