இலங்கை பொலிஸ் சேவையில் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் பதவிக்கு, இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. ஆகவே, கிடைத்திருக்கும் இவ்வறிய சந்தர்ப்பத்தினை எமது சமூக இளைஞர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளும்படி, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் கேட்டுள்ளார்.
இது குறித்து, பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் விடுத்துள்ள அறிக்கையொன்றிலேயே, அவர் மேற்படி கோரிக்கையை விடுத்துள்ளார்.
தொடர்ந்து அவ் அறிக்கையில், ‘ பொலிஸ் சேவைக்கு விண்ணப்பிப்பவர்கள் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் தமிழ் உட்பட ஆறு பாடங்களில் சித்திபெற்றிருப்பதுடன் நான்கு பாடங்களில் திறமைச்சித்தி பெற்றிருத்தலும் வேண்டும். மேலும், கணித பாடத்தில் இரு தடவைக்கு மேற்படாத வகையில் சித்தியடைந்திருத்தல் முக்கியமானதாகும்.
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் 31.01.2022 திகதிக்கு, 18 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்டவர்களான இளைஞர்கள் மட்டும், பொலிஸ் சேவைக்கு விண்ணப்பிக்கலாம். 5 அடி 4 அங்குலம் – 162.5 cm இருத்தலும், மார்பளவு – 30 அங்குலம் – 76 cm என்ற வகையில், உடற்தகைமைகள் அமைய வேண்டும். அத்துடன், திருமணமாகாதவர்களாகவும் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு விண்ணப்பதாரியும், இலங்கையின் எப்பிரதேசத்திலும் கடமையாற்ற வேணடியது அவசியமாகும். பொலிஸ் சேவையின் கௌரவத்திற்கு பொருந்தாத மற்றும் கடமைக்கு தடையான வகையில், அறுவைச் சிகிச்சை மூலம் உடலுறுப்புக்கள் பொறுத்தப்பட்ட ஊனமுற்றவராக இருத்தல் ஆகாது.
அத்துடன், விண்ணப்பதாரி இலங்கைப் பிரஜையாக இருத்தல் அவசியமாகும். அவர் குற்றச்செயல்களில் ஈடுபடாதவராகவும், ஒழுக்கமானவராகவும் இருத்தல் வேண்டும்.
மேலதிக கல்வித் தகைமைகள், தொழில் தகைமைகள், மொழித்தகைமைகள், விளையாட்டுத்திறமைக தலைமைத்துவம், பொது சேவைகள், நேர்முகப் பரீட்சை சபையின் பாராட்டு என்ற வகையில், 100 புள்ளிகள் நேர்முகப் பரீட்சை மூலம் வழங்கப்படும். அத்துடன் எழுத்துப் பரீட்சையும், வைத்தியப் பரீட்சையும் தனித்தனியாக இடம்பெறும்.
இத்தகைய தகுதிகளைக் கொண்ட இளைஞர்கள், பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் 31.01.2022க்கு முன்பதாக பணிப்பாள பயிலுனர் ஆட்சேர்ப்புப் பகுதி, இல. 375, 1ம் மாடி, ஸ்ரீசம்புத்தத்வ ஜயந்தி மாவத்தை, கொழும்பு -06. என்ற முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பப்படல் வேண்டும்.
விண்ணப்பப்படிவம் அனுப்பப்படும் கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் ‘ பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள்’ என்று குறிப்பிடுதல் வேண்டும். ஆகவே, இப் பொலிஸ் சேவைக்கு விண்ணப்பிப்பவர்கள் காலதாமதமின்றி விண்ணப்பப்படிவங்களை உரிய முறையில் அனுப்புதல் வேண்டும். கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தை எமது சமூக இளைஞர்கள் கிரமமாகவும்இ முறையாகவும் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
சேவைக்கு விண்ணப்பிப்பவர்கள் எனது இல.19, பதுளுப்பிட்டிய ரோட், பதுளைப் பணியகத்தினர் மூலம் ஆலோசனைகள்; மற்றும் அறிவுறுத்தல்களை பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது










