போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பம்!

போதைப்பொருள் பேரழிவை நாட்டிலிருந்து வேரோடு அழிப்பதற்கான அரசாங்கத்தின் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று 30 ஆம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமாகிறது.

இந்த தேசிய வேலைத்திட்டம் இன்று காலை பத்து மணிக்கு சுகததாச உள்ளரங்கில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

“எமது நாட்டின் எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதற்கான சிறந்த வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கின்றமை சகலரதும் பாராட்டைப் பெற்றுள்ளது. வந்தபின் காப்பதை விடவும் வருமுன் காப்பதே சிறந்தது. இதற்கான விழிப்புணர்வுகளில் நாட்டில் அனைவரும் இனி வரும் காலங்களில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும்.

இந்த தேசிய செயற்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பரந்தளவிலான பிரசார நடவடிக்கைகள் அவசியமென்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனூடாக போதைப்பொருள் அச்சுறுத்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு பாரிய திட்டமாக இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது. இந்த செயற்பாடுகளில் எதிர்கொள்ள நேரும் எந்த அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்துவதில்லை என்ற தீர்மானத்தில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

இதனால், இதற்கான பிரசாத் திட்டங்களை சாத்தியமானதாக முன்னெடுப்பதில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களின் பங்களிப்பு தொடர்பிலும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. இதன்போது, இந்த தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அனைத்து ஊடகங்களின் பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருத்தார்.

அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் தொடர்பில் விவாதிக்க முடிந்தாலும், நாட்டிலிருந்து போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதில் இனிமேலும் விவாதித்துக் கொண்டிருப்பதற்கு இடமில்லை என்றும் போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான துரித வேலைத் திட்டத்திற்காக முழு நாடும் ஒன்றுபட வேண்டும் என்றும் இதன்போது ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இளைஞர் சமூகத்தைப் போன்றே பாடசாலை மாணவர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவித்து வரும் போதைப் பொருள் வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டு பெருமளவிலான குற்றங்கள் இடம்பெறுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தேசிய மட்டத்தில் அரசியல் தலைமைத்துவம், செயற்திறனாக முடிவெடுக்கும் பொறிமுறை மட்டுமன்றி பரந்த பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய தேசிய மட்டத்திலான வேலைத்திட்டத்தின் ஊடாக போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றும் இனம் காணப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றக் கும்பல்களின் நிதி பலம் என்பன பொருளாதாரம், சமூகக் கட்டமைப்பு, அரச பொறிமுறை மற்றும் சட்டத்தின் ஆட்சியைக் கூட வீழ்ச்சியடையச் செய்து நாட்டையும் சமூகத்தையும் அழித்து வருவதையும் காணமுடிகிறது.

Related Articles

Latest Articles