போதைப்பொருள் கடத்தல் வியாபாரத்தை கைவிட்டு பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைவதற்கு தயாராக இருப்பதாக வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 7 பேர் தெரியப்படுத்தியுள்ளனர் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நேற்று (09) தெரிவித்தார்.
இவர்களின் கோரிக்கை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது எனவும், உரிய கலந்துரையாடல்களின் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.
“போதைப்பொருள் தொடர்பில் தகவல் வழங்குவதற்காக தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன.
குறிப்பாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளிநாட்டில் இருந்து அழைப்பை ஏற்படுத்தியுள்ளனர். போதைப்பொருள் வியாபாரத்தில் இருந்து விலகி, சமூகத்தில் சிறந்த பிரஜையாக வாழ்வதற்கு வாய்ப்பொன்றை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஓர்அங்கமாக போதைப்பொருள் வியாபாரத்தை கைவிட்டு, அரசாங்கத்திடம் சரணடைவதற்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளனர். இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
எனினும், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. உரிய கலந்துரையாடலின் பின்னரே முடிவுகள் எடுக்கப்படும்.” எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.










