போராட்டத்தை ஒடுக்க அடக்குமுறை! தொழிலாளர் தேசிய சங்கம் கண்டனம்!!

சர்வதேச ரீதியில் அதிகளவு ஆதரவை பெற வேண்டிய தருணத்தில் காலி முகத்திடலில் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து நமது நாடு அனாதரவான நிலைக்கு தள்ளப்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

நாட்டு மக்களின் நேரடி வாக்குகளால் புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்படாவிட்டாலும் கூட நாடாளுமன்றத்தின் ஊடாக நியமிக்கப்பட்ட புதிய ஜனாதிபதிக்கு சர்வதேச அளவில் வாழ்த்துக்களும், ஆதரவுகளும் வந்ததுடன் உள்நாட்டிலும் பல்வேறு கட்சிகள் அவருக்கு ஒத்துழைப்பு வழங்க விருப்பம் தெரிவித்தனர்.

ஆனாலும் வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை போட்டு உடைத்தது போல ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் மீது பாதுகாப்பு படைகளை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டு ஜனநாயக மீறல் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் நாட்டு மக்களுக்கு உடனுக்குடன் உண்மை தகவல்களை வழங்கும் உள்நாட்டு மற்றும சர்வதேச ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு ஊடக, கருத்து வெளியிடும் சுதந்திரத்திற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பல்வேறு நாடுகள், சர்வதேச ஊடகங்கள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் சட்டதரணிகள் சங்கம், சர்வ மதத் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் கண்டனத்தையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இது நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருப்பதுடன் மனித உரிமைகள், ஜனநாயக கோட்பாடுகளுக்கு எதிரான செயற்பாடாகவும் காணப்படுகிறது.
ஆட்சி அதிகாரம் கைக்கு வந்த பின்னர் எது வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கும் ஆட்சியாளர்கள் அந்த ஆட்சி அதிகாரம் தமக்கு வருவதற்கு காரணமாக இருந்தவர்களை பற்றி சற்று சிந்தித்து பார்க்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடாக உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles