” சம்பந்தன் புலிகளுடன் கைகோர்த்திருந்தார், போர் முடிவடைந்தவுடன் அவரை சிறையில் அடைத்திருக்க வேண்டும், ஆனால் மஹிந்த ராஜபக்ச அவ்வாறு செய்யவில்லை.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் என சனல் 4 ஆவணப்படத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கருத்து வெளியிட்டிருந்தார்.
மொட்டு கட்சியின் ஊடக சந்திப்பு கொழும்பில் நேற்று நடைபெற்றது. இதன்போது சம்பந்தனின் கூற்று தொடர்பில் கருத்து வெளியிட்ட காமினி லொக்குகே,
” சனல் – 4 பற்றியே இன்று அதிகம் கதைக்கப்படுகின்றது, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என சம்பந்தனும் கருத்து வெளியிட்டுள்ளார், போர் முடிவடைந்த பின்னர் தாங்கள் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதை சம்பந்தன் மறந்துவிட்டார் போலும், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக அவர்கள் தொடர்பில் அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ச எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
புலிகளுடன் இவர்கள் (சம்பந்தன்) கைகோர்த்திருந்தனர். ஆனால் அவர்களின் தலைவரான அமிர்தலிங்கத்தையும் புலிகள் கொலை செய்தனர்.
சனல் – 4 என்பது எமது நாட்டுக்கு எதிராக போலியான தகவல்களை வெளியிடும் நிறுவனம், எனவே, சர்வதேச விசாரணை அல்ல எந்த விசாரணையைவது நடத்தட்டும். பௌத்த தலைவரை ஜனாதிபதியாக்குவதற்கு முஸ்லிம் இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வார்களா என்ன? ராஜபக்சக்கள் தொடர்பில் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தவே இப்படியான நடவடிக்கை இடம்பெறுகின்றது.” – என்றார் காமினி லொக்குகே.
