மகா கும்பமேளா விழாவில் கூட்ட நெரிசல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக உயர்வு!

உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் புனித நீராட கோடிக்கணக்கான மக்கள் திரண்டதால் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர் எனவும், 60 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளாவில் புனித நீராடுவது மிகவும் புண்ணிய நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் ஜனவரி 13-ம் திகதி முதல் 28-ம் திகதி வரை 16 நாட்களில் 15 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.

மகா கும்பமேளாவின்போது, குறிப்பாக மவுனி அமாவாசை போன்ற சிறப்பு நாட்களில் நீராடுவது பாவங்களை போக்கி ‘மோட்சம்’ அல்லது முக்திஅளிக்கும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

இதனால் நேற்று அதிகாலை முதலே கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடும் இடத்துக்கு வந்துள்ளனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் லட்சக்கணக்கான மக்கள் அப்பகுதியில் திரண்டனர்.

ஆற்றுப்பகுதிக்குள் நுழைவதைத் தடுக்க தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. அந்த தடுப்புகளை உடைத்துக் கொண்டு பக்தர்கள் இறங்கியபோது திடீரென கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, கூட்ட நெரிசலில் சிக்கிய சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. மேலும், சிலர் கீழே விழுந்துள்ளனர். இதனால், கீழே விழுந்தவர்கள் மீது மற்றவர்களும் விழுந்துள்ளனர். அப்போது பயம் காரணமாக கீழே விழுந்தவர்கள் மீது பலர் ஏறிக் குதித்து ஓடியுள்ளனர். பலர் அங்குமிங்கும் ஓடியதால் அந்த இடமே போர்க்களம்போல காணப்பட்டுள்ளது. இதனால் பலர் மயங்கி விழுந்துள்ளனர்.

இதையடுத்து பொலிஸார், தீயணைப்பு வீரர்கள், துணை ராhணுவப் படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் விரைந்து சென்று அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு உதவியாக தன்னார்வ தொண்டர்களும் செயல்பட்டனர். நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Articles

Latest Articles