மகிந்த ராஜபக்‌சவிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்‌சவிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் எதிர்வரும் புதன்கிழமை முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 9ம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகை ஆர்ப்பாட்டகாரர்கள் மீது தாக்கதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே முன்னாள் பிரதமருக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்‌ச, ரோஹித அபே குணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோருக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிங்க சேனாதியை நாளை விசாரணைகளுக்கு முன்னிலையாகுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

அலரிமாளிகையில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற அரசியல் கூட்டத்திற்கு சிறைகைதிகள் அழைத்துவரப்பட்டதாக முன்வைக்கபட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவே,  எவன்காட் நிறுவனத்தின் தலைவர் நிங்க சேனாதிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் ஆணையாளர் இதற்கு முன்னதாக  மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகி, வாக்குமூலம் வழங்கியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

அத்துடன், பொலிஸ்மா அதிபர் மற்றும் மேல்மாகாண பொலிஸ் பொறுப்பதிகாரி தேசபந்துதென்னகோன் ஆகியோரும் எதிர்வரும் வியாழக்கிழமை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கபட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles